News Just In

6/17/2022 08:02:00 PM

இலங்கை அரசாங்கத்தின் முடிவு தவறானது - மத்திய வங்கியின் ஆளுநர் வெளிப்படை!

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மீட்பு கடனுதவியை இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை முன்னதாக நாடியிருந்தால், இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை தவிர்த்திருக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வெளியில் இருந்து உதவியை பெற்றுக்கொள்வதில் இலங்கை அரசாங்கம் காட்டிய தாமதமானது தவறானது என பி.பி.சி க்கு வழங்கிய செவ்வியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச சமூகத்தின் ஐந்து பில்லியன் டொலர் நிதி உதவி, இவ்வாண்டு தேவை என நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தனது வரலாற்றில் கடந்த மாதம் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலைமையை அடைந்திருந்தது. சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லும் முடிவை ஆரம்பத்திலேயே மேற்கொண்டிருந்தால், ஒரு வருடத்திற்கு முன்னரே கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருந்தால், தற்போது நாட்டு மக்கள் தற்போது அனுபவிக்கும் துன்ப நிலைமையை சமாளித்திருக்க முடியும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் கூறியுள்ளார்.

அதீத எரிபொருள் தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் மருந்துப் பற்றாக்குறை போன்றவற்றை அனுபவித்து வரும் இலங்கையின் பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டமானது, அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள் தங்கள் உணவு உட்கொள்ளலைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகக் கண்டறிந்துள்ளது.

1948 இல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்காக கொழும்புக்கு வரவுள்ள நிலையில், இந்தப் பேச்சுக்களில் முக்கிய பங்காளராக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பங்கேற்கவுள்ளார்.

எனினும் நந்தலால் வீரசிங்க, தொடர்ந்தும் அந்தப் பதவியில் நீடிப்பதில் நிச்சயமற்ற தன்மை காணப்படும் நிலையில், இம்மாத இறுதியில் அவர் ஆறு ஆண்டுகளுக்கு நிரந்தர பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: