News Just In

6/09/2022 07:07:00 PM

இளைஞர்களின் கனவை கலைத்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடு எதற்கு – சபையில் சாணக்கியன் கேள்வி!

மாதாந்தம் 50 ஆயிரம் சம்பளம் பெறும் பட்டதாரி இளைஞர்களின் வீடு கட்டும் கனவை கலைத்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடு எதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 'வடக்கு கிழக்கினை பொறுத்தவரையில் 30 வருட யுத்தம் காரணமாக வீடுகளை இழந்து, வீடுகள் இல்லாமல் ஆக்கப்பட்டு, அழிக்கப்பட்டுள்ள ஒரு பிரதேசம்.

அந்த வகையிலேயே கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாரிய வீடமைப்பு வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் அந்த வீடுகள் இதுவரை முடித்துக்கொடுக்கப்படாமல் உள்ளன.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை, தாம் பூர்த்தி செய்யமுடியாது என அரசாங்கத்தின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே வடக்கு கிழக்கில், நல்லாட்சி அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தை காட்டிலும் தற்போதைய அரசாங்கம் கடன் அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட சாணக்கியன், இந்த வீடுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மாத்திரமே கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனைக் கொண்டு வீடுகளை அமைக்கமுடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வீடமைப்புத்துறையின் முன்னாள் பிரதியமைச்சர், குறித்த வீடுகளுக்கு 6 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எனினும் வழங்கப்பட்ட தகவல்கள் யாவும் பொய்யானவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திலுள்ளவர்கள் வீடமைப்பு சார்ந்த விடயங்களில் பாரிய பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments: