News Just In

6/24/2022 03:34:00 PM

உலக சூழல் தினத்தை அமுலாக்கும் விதமாக இறாலோடைக் கடற்கரை சுத்தமாக்கும் பணிகள் முன்னெடுப்பு!




- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

உலக சூழல் தினத்தை அமுலாக்கும் விதமாக மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இறாலோடைக் கடற்கரையோரமெங்கும் சுத்தமாக்கும் பணிகள் பிரதேச செயலாளர் ஜி. அருணன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்), கொகாகோலா பவுண்டேஷன், இளைஞர் அபிவிருத்தி அகம் ஆகியவை கூட்டிணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.

பிரதேச மக்கள், மீனவர்கள் மற்றும் சூழல் நேய செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் வியாழக்கிழமை 23.06.2022 கடற்கரையோ சுத்தமாக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் அருணன்,; இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கடற்கரையோரங்களைச் சுத்தமாக்குதல்; , கிராமங்களில் தென்னை உட்பட நீண்டகால பயன் தரும் பழ மரங்கள், உப உணவுப் பயிர்கள் விநியோகம் ஆகிய திட்டங்கள் இயற்கைச் சூழலைப் பேணுவதற்கும் மக்கள் போஷணைச் சத்துள்ள உணவுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்வதற்கும், உணவுப் பஞ்சத்தைக் குறைப்பதற்கும் உதவும்.

மேலும், சிறந்த மீன் வளத்தைக் கொண்டுள்ள மட்டக்களப்பு வாகரைப் பிரதேச கடல் வளம் பாதுகாக்கப்பட வேண்டும் கடலை மாசுபடுத்துவதில் குட்டித் தீவான இலங்கைத் தேசம் 10வது இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது கவலைக்குரிய விசயம். இதற்கு நாம் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும். எங்களது செயற்பாடே எங்களது எதிர்காலமாக அமையும்” என்றார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக அதிகாரிகள் இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் அலுவலர்கள் உட்பட பிரதேச பொது மக்களும் கலந்து கொண்டனர்.


No comments: