எனக்கு எதிராக எவரும் கருத்துக்களை தெரிவிக்கலாம் - போராட்டங்களையும் நடத்தலாம். ஆனால், என்னைப் பதவியிலிருந்து எவரும் விரட்ட முடியாது. 5 வருட மக்கள் ஆணைக்கமைய நான் அரச தலைவர் பதவியில் நீடிப்பேன் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்று நடத்திய விசேட சந்திப்பின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், "நான் நிறைவேற்று அதிகாரத்தைக்கொண்ட அரச தலைவர். எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளேன். இந்த நிலையில், நடைமுறையிலுள்ள இந்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் கொடுக்கவும் முடியாது; மிரட்டவும் முடியாது.
மக்கள் போராட்டங்களை அடக்குவதற்காக அவசரகாலச் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்தவில்லை. போராட்டம் என்ற பெயரில் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராகவே அனைத்து சட்டங்களும் பாயும்” என்றார்.
நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை அரச தலைவர் மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
அரச தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் சிலர் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கு எதிராகக் கருத்துக்களையும் முன்வைத்தனர்.
எனினும், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரினதும் வாய்களை மூடும் வகையில் அரச தலைவர் மேற்படி விடயங்களை கூறியுள்ளார்.
இதற்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கடும் கண்டனங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் அறவழிப் போராட்டம் மீது கைவைக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments: