ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகக் கோரி நாளை நடைபெறவுள்ள 24 மணித்தியால ஹர்த்தாலுக்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக, தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் அரை அரசு நிறுவனங்கள், வங்கிகள், ஆடைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்ற நிலையில், சுகாதாரம், போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம், கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளின் தொழிற்சங்கங்களும் ஈடுபடவுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு பதில் கிடைக்காவிடில் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் தொடர்ச்சியான ஹர்த்தால் ஆரம்பிக்கப்படும் எனவும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொழும்புக்கு வரவழைக்கப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, நாளையதினம் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு விசேட வைத்தியர்கள் சங்கமும் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.
நாளைய தினம் விசேட வைத்தியர்களை சந்திப்பதற்கு தனியார் நிறுவனங்களில் நேரங்களை ஒதுக்கிக் கொள்ள வேண்டாம் என விசேட வைத்தியர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். விசேட வைத்தியர்கள் ஹர்த்தால்களில் பங்கேற்றாலும், அரச மருத்துவமனைகளில் வழக்கம் போல் செயல்படுவார்கள் எனவும் அனைத்து அவசர சிகிச்சைகளிலும் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பியகம, கட்டுநாயக்க உள்ளிட்ட முதலீட்டு வலயங்களில் உள்ள ஆடைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கொக்கல முதலீட்டு வலயத்தில் உள்ள ஊழியர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவளிப்பார்களா என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு புகையிரத சேவை இடைநிறுத்தப்படும் என புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்துள்ளார்.
மேலும் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த ஹர்த்தாலுக்கு தாங்கள் தீவிர பங்களிப்பை வழங்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
வீடுகள், கடைகள், சுப்பர் மார்க்கெட்களுக்கு முன்பு கறுப்புக் கொடி ஏற்றப்பட வேண்டும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் அழைப்பு விடுத்துள்ளது.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை பூஜைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை வீதிகளில் செல்லும் வாகனங்களின் ஹோர்ன்களை தொடர்ந்து ஒலிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
No comments: