News Just In

5/25/2022 06:44:00 AM

வங்கிகள் ஊடாக டொலர்களை வழங்க மத்திய வங்கி இணக்கம் - அமைச்சர் வெளியிட்ட தகவல்

வங்கிகள் ஊடாக இறக்குமதியாளர்களுக்கு டொலர்களை வழங்குவதாக மத்திய வங்கியின் ஆளுநர் உறுதியளித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அத்தியாவசிய பொருட்களுக்கு தேவையான டொலர் வங்கிகளால் வழங்கப்படும். தேவையான இறக்குமதிகள் வெற்றிகரமாக தொடர வழிவகை செய்யப்படும் என மத்திய வங்கி ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

சராசரியாக, அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய ஒரு மாதத்திற்கு சுமார் 100-125 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகிறது." இறக்குமதியாளர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தேவையான நிதியை வழங்குவதன் மூலம் இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும் என்பதே இதன் பொருள். "கடந்த காலங்களில், சில இறக்குமதியாளர்கள் உண்டியல் முறை போன்ற பிற வழிகளில் பொருட்களை இறக்குமதி செய்ய விருப்பப்பட்டனர்.

எனினும், தற்போது டொலரின் மதிப்பை நிலைப்படுத்தலாம் என்று நினைக்கிறோம். வங்கிப் பரிவர்த்தனைகள் மூலம் அதைச் செய்யலாம். அதனால் அந்த பரிவர்த்தனைகளைச் செய்வதற்குத் தேவையான அனைத்துப் பணத்தையும் வங்கிகள் மூலம் வழங்குவதாக மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.

இதேவேளை, மக்களுக்குத் தேவையான பொருட்களை லங்கா சதொச ஊடாக விநியோகிப்பதற்கும் அதன் மூலம் சந்தையில் பொருட்கள் கிடைப்பதை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments: