இலங்கையில் வன்முறை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் இது தொடர்பாக இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் சாலையில் இறங்கி தீவிரமாக போராடி வருகிறது. இதனால் அங்கு கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் அமைச்சரவை கலைக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்படாததால் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்ச , பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவரும் பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் செய்தனர். இதன் விளைவு பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். அதேசமயம் அவரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கியதால் அங்கு கலவரம் வெடித்தது.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களால் அதிகாலையில் எம்.பி.க்கள் உள்பட 35 அரசியல்வாதிகளின் வீட்டை தீவைத்து கொளுத்தப்பட்டது. இதில் ராஜபக்சவின் பூர்வீக பழைய வீடும் தீக்கிரையானது. இந்தநிலையில் பிரதமர் மாளிகையான அலரியிலிருந்து ராஜபக்ச இன்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார். தற்போது ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
அங்கு போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கை மக்கள் அமைதி காக்க வேண்டும் என அந்நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், பொதுமக்கள் அனைவரும் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்தவும், அமைதியாக இருக்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை ஒருமித்த கருத்து மூலம் மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
No comments: