தென்னிலங்கையில் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை கண்டு அஞ்சிய போது, மட்டக்களப்பிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களே ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று காலை மரண வீடு ஒன்றிற்கு சென்றிருந்த போது தாய் ஒருவரை சந்தித்து பேசினேன். அவர் எங்கே செல்கின்றீர்கள் என என்னிடம் கேட்டார். நான் இங்கு வருகை தரவுள்ளமையினை அவரிடம் சொன்னேன். அவர் என்னிடம் அங்கே என்ன பேசப்போகின்றீர்கள் என என்னிடம் கேட்டார். பின்னர் கோட்டா கோ கோம் என கூறாதீர்கள். கோட்டா கோ ஜெயில் என கூறுகள் என சொன்னார். அது உண்மைதான்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். இராஜாங்க அமைச்சினை எடுத்தால் மாலை கிடக்கும் என எதிர்பார்த்த அவருக்கு மக்கள் செருப்பினை காண்பித்துள்ளனர். அங்கே செருப்பினை காண்பித்த அந்த அம்மாவின் கைகளுக்கு தங்கத்தில் காப்பு போட வேண்டும்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தற்போதுதான் அரசாங்கத்திற்கு எதிராக கண்டி முதல் கொழும்பு வரையான போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்.
ஆனால் நாங்கள் இந்த அரசாங்கம் வேண்டாம் என தெரிவித்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தினை இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்தவர்கள்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments: