News Just In

4/04/2022 02:59:00 PM

அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்!


முழு அமைச்சரவையொன்று நியமிக்கப்படும் வரை நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளை சட்டபூர்வமாகவும் நிலையானதாகவும் பேணுவதற்காகவே நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) நியமித்திருத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கள் மற்றும் நிதியமைச்சகங்களின் செயற்பாடுகளுக்காக சபைத் தலைவர் மற்றும் அரசாங்கத்தின் பிரதம கொறடா ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை இருப்பதால் இந்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு தமது பங்களிப்பை வழங்குமாறு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஜனாதிபதி ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பங்காளி கட்சிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments: