News Just In

4/05/2022 06:27:00 AM

கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு வசதியாக இலங்கை மந்திரிகள் அனைவரும் கூண்டோடு இராஜினாமா செய்தனர்.

அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa), பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) இருவரையும் தவிர்த்து மீதமுள்ள 26 மந்திரிகளும் இராஜினாமா செய்தனர். இதல் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நமல் ராஜபக்ஷவும் (Namal Rajapaka) அடங்குவார்.

இந்த நிலையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் நேற்றும் நாடு முழுவதும் வீரியமாக அரங்கேறின.

கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோதும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராட்டக்காரர்கள் நேற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ராஜபக்ஷ உடனடியாக பதவி விலகக்கோரி கோஷமிட்ட அவர்கள், அங்கே போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளையும் கீழே தள்ளிவிட்டு ராஜபக்ஷவின் வீட்டை நோக்கி முன்னேறினர்.

உடனே அங்கே பாதுகாப்புக்கு நின்ற பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments: