News Just In

3/06/2022 06:38:00 AM

தமிழ் மக்களுக்குரிய நீதியை கோரி பயணித்து வரும் மனித நேய மிதிவண்டிப்பயணம் சுவிஸை கடந்துள்ளது!

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்களுக்குரிய பொறுப்புக்கூறல் விடயங்களை தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லையென ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட், நேற்றுமுன்தினம் மனித உரிமை பேரவையில் விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதே கோரிக்கைகளுடன் தமிழ் மக்களுக்குரிய நீதியை கோரி ஐரோப்பிய நாடுகள் ஊடாக பயணித்து வரும் மனித நேய மிதிவண்டிப்பயணம் இன்று தனது 18 ஆம் நாளை சுவிசில் கடந்துள்ளது.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்களை மையப்படுத்தி அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் சிறிலங்கா மீது அனைத்துலக சுயாதீன விசாரணை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட்ட முக்கியமான கோரிக்கைகளுடன் ஐரோப்பிய நாடுகள் ஊடாக இடம்பெறும் இந்த மனித நேய மிதிவண்டிப்பயணம் தனது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

நேற்றுமுன்தினம் பேர்ணில் நகரில் உள்ள வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பேர்ண் மாநகர முதல்வர் பணியகங்களில் முறையீட்டு மனுக்களை கையளித்த அறவழி செயற்பாட்டாளர்கள் அதன் பின்னர் பிறிபோர்க் மாநகர முதல்வரிடமும் மனுவொன்றை ஒப்படைத்துள்ளனர்.

நேற்று லௌசாண் மாநகரம் ஊடாக பயணித்த இந்தக்குழு நாளை (07) ஐ.நா மனித உரிமை பேரவை முன்றலில் புலம் பெயர் தமிழ்மக்களால் நடத்தப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: