ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பாகிஸ்தான் அரசு வழங்கும் உயர் கல்விக்கான புலமைப் பரிசில்களை மட்டக்களப்பு மத்தி கல்வி வலய மாணவர்களும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்கும் பொருட்டு பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவின் அதிகாரிகள் சமீபத்தில் ஏறாவூருக்கு விஜயம் செய்து மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அதிகாரிகளுக்கு தெளிவூட்டலை வழங்கினர்.
இதன் மூலம் இவ்வாறான அரிய வாய்ப்பு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி ஏறாவூர் ஓட்டமாவடி வாழைச்சேனை பிரதேச மாணவர்களும் பெற்றுக் கொள்ள வழிவகை ஏற்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடுகளைச் செய்தமைக்காக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான நஸீர் அஹமட்டுக்கு மட்டக்களப்பு மத்தி வலய கல்விச் சமூகம் நன்றி தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த வருடமும் 17.08.2021 அன்று பாகிஸ்தான் இலங்கை உயர் கல்வி ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசின் உயர் கல்விக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண மாணவர்கள் கொரோனா வைரஸ் பரவல் தொற்று நிலைமையிலும் இந்தப் பரீட்சையை சிரமமின்றி எழுதும் வகையில் முதற் தடவையாக இந்தப் பரீட்சை ஏறாவூரில் நடத்தப்பட்டிருந்தது.
இத்தகைய வாய்ப்புக்காக வழிவகை செய்து பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவை மட்டக்களப்புக்கு வர ஏற்பாடு செய்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டுக்கும் பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் தமது மேலான நன்றிகளைத் தெரிவிப்பதாக மட்டக்களப்பு மத்தி வலய கல்விச் சமூகம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments: