News Just In

1/23/2022 03:54:00 PM

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் புதிய தவிசாளராக வைத்தியர் ஸாஹிர் தேசிய அமைப்பாளராக சட்டத்தரணி முஜீபுர் ரஹ்மான் நியமனம்



ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளராக Dr.K.M.ஸாஹிர் அவர்களும் அதன் தேசிய அமைப்பாளராக PM. முஜீபுர் ரஹ்மான் LL.B அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக NFGG யின் தலைமைத்துவ சபை அறிவித்துள்ளது.

தலைமைத்துவ சபை அமர்வின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாகவே இந்த நியமனங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பில் சனிக்கிழமை 22.01.2022 வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,,

கடந்த 25.12.2021 அன்று NFGG யின் தலைமைத்துவ சபை அமர்வு இடம் பெற்றது. இதில் கட்சியின் எதிர்காலத் திட்டங்களை விரிவாக்கும் பொருட்டு கட்சியின் உயர் பதவிகளுக்கான புதிய நியமனங்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.அதற்கிணங்க கட்சியின் தவிசாளராக மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த Dr. KM. ஸாஹிர் தேசிய அமைப்பாளராக மன்னாரைச் சேர்ந்த PM.முஜீபுர் ரஹ்மான் LL.B ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனைகள் ஏக மனதாக முன்வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுவின் அபிப்பிராயங்களும் பெறப்பட்டன. இந்நியமனங்களை ஆமோதித்ததைத் தொடர்ந்து Dr. ஸாஹிர் NFGG யின் தவிசாளராகவும் முஜிபுர் ரஹ்மான் அதன் தேசிய அமைப்பாளராகவும் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.

Dr.ஸாஹிர் பலவருடகால நீண்ட சமூகப் பணி மற்றும் அரசியல் ஈடுபாட்டைக் கொண்டவர். இலங்கை மருத்துவத்துறையின் அதியுயர் அதிகாரமிக்க சபையான இலங்கை மருத்துவ சபையில்( Sri Lanka Medical Council) இல் 2010 முதல் 2015 வரை அங்கம் வகித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு மூதூர் பிரதேசத்தில்3CD என்ற சமூக சேவை அமைப்பினை ஸ்தாபித்த அவர், அதன் தலைவராக இருந்து பல வருடங்களாக சேவையாற்றி வருகிறார். பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக பல வருடங்கள் தேசிய மட்டத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அதே போன்று கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் NFGG சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் களமிறங்கிய Dr.ஸாஹிர் கிட்டத்தட்ட 15000 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனைப் போன்று மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட PM. முஜீபுர் ரஹ்மான் ஒரு சட்ட இளமானி(LL.B) ஆவார். மேலும் இவர் ஒரு சமூக செயற்பாட்டாளராகவும், உளவள ஆலோசகராகவும், ஊடகவியலாளராகவும் நன்கறியப்பட்டவர். இவர் மிக நீண்டகாலமாக பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் தீவிர கரிசனையோடு செயற்பட்டு வருபவர். முசலி பிரதேச சபையில் NFGGயின் பிரதிநிதியாகவும் முஜிபுர் ரஹ்மான் LL.B தற்போது பதவி வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.



No comments: