News Just In

1/21/2022 06:52:00 PM

கலாசர மற்றும் கலை படைப்புகளை பாதகாக்க காத்தான்குடியில் கிராமிய கலை வட்டங்கள் ஸ்தாபிப்பு!

கலாச்சாரம் மற்றும் கலைஞர்களின் கலைப் படைப்புகளின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக காத்தான்குடியில் கிராமிய கலை வட்டங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதய ஸ்ரீதரின் வழிகாட்டலின் கீழ் பிரதேச கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். ஜவாஹிர் தலைமையில் கலை வட்டங்களை ஸ்தாபிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (21.01.2022) பிரதே செயலகத்தில் இடம்பெற்றது.

அனைத்து கலாச்சாரம் மற்றும் கலைஞர்களின் கலைப் படைப்புகளின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கும் கிராம மட்டத்தில் கலைஞர்கள் மற்றும் சமூகத்தை அணிதிரட்டல் எனும் குறிக்கோளுடன் தேசிய மரபுரிமை, அரங்கக்கலை மற்றும் கிராமிய கலை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு மற்றும் இலங்கை கலைக்கழகம் ஒன்றினைந்து கிராமிய கலை வட்டங்களை நிறுவும் வேலைத்திட்டத்தினை நாடு பூராகவும் முன்னெடுத்து வருகின்றது.

கிராமப்புரங்களில் ஒதுங்கி இருக்கும் கலைஞர்களின் உண்மையான திறமைகளுக்கு அரச அனுசரணை வழங்கி தரமான கலைகளை வளர்ப்பதன் மூலம் உண்மையான கலாசாரத்தையும், ஒழுக்கமான சமூகத்தினையும் உருவாக்க முடியும் என நம்பப்படுகிறது.

இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள கலை இலக்கிய கழகம், இஸ்லாமிய இலக்கியக் கழகம் மற்றும் சிறுவர் இல்ல கோலாட்டக் கழகம் என்பன கிராமிய கலை வட்டங்களாக நிறுவப்பட்டன.

இதனூடாக நாட்டுப்புற கலை, கவிதை, நடனங்கள், இசை, கலை, நாடகங்கள், தற்காப்பு கலை, கட்டிடக்கலை, சுதேச மருத்துவம், கைவினை, சிற்பங்கள் உள்ளிட்ட 23 கலை அம்சங்களை பாதுகாக்க இராஜாங்க அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது அபிவிருத்தி உத்தியோகத்தர் சிந்து உசா, கலைஞர்கள், இலக்கியவாதிகள், கலைக்கழகங்களின் உறுப்பினர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

.எச்.ஹுஸைன் 






No comments: