News Just In

1/03/2022 08:36:00 PM

லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் லாஃப்ஸ் நிறுவனத் தலைவர் டப்ளியூ.கே.எச். வேகப்பிட்டியவின் கருத்து!

டொலர் பற்றாக்குறை காரணமாகவே தங்களது நிறுவனத்தால் சந்தைக்கு போதியளவு சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச். வேகப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

எரிவாயு கொள்கலன்களை நிரப்புகையிலும், அதனை விநியோகிக்கும் போதும், பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பரிந்துரைகள் நீதிமன்றம், இலங்கை தரநிர்ணய நிறுவகம் மற்றும் நுகர்வோர் அதிகார சபையினால் கடந்த நாட்களில் முன்வைக்கப்பட்டன.

அவற்றைப் பின்பற்றி எரிவாயுவை நிரப்பி, சந்தைக்கு விநியோகிக்கும் போது தட்டுப்பாடுகள் ஏற்படுகின்றன.

எவ்வாறாயினும் தற்போது நாடளாவிய ரீதியாக நாளாந்தம் 10 ,000 முதல் 15,000 வரையிலான லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன.

இதனை தாண்டியும் தட்டுப்பாடு நிலவுமாயின் எதிர்வரும் மூன்று வாரங்களில் முழுமையாக சந்தைக்கு விநியோகிக்க முடியும் என லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச். வேகப்பிட்டிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஹம்பாந்தொட்டை துறைமுகத்தில் இருந்து எரிவாயுவை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு கடன் உறுதிப் பத்திரம் அவசியமாகவுள்ளது.

கடன் உறுதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு வங்கிகளின் ஊடாக நாணய கடிதம் விநியோகிக்கப்பட வேண்டும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறை காரணமாக அந்த நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் டொலர் வழங்கப்படுமாயின் 24 மணித்தியாலங்களில் எரிவாயுவை விநியோகிக்க முடியும்.

இதேவேளை, திட்டமிட்ட வகையில் தங்களது எரிவாயு கொள்கலன்களில் நீல நிற வர்ணம் பூசப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் காவல்துறை மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தொழிற்துறை என்ற வகையில் இது பாதிப்பான விடயமாகும் என லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச். வேகப்பிட்டிய குறிப்பிட்டார்.

லிட்ரோ நிறுவனத்தின் ஊடாகவா இந்த செயற்பாடு இடம்பெறுகின்றது? என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, இதற்கு பதிலளித்த லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச். வேகப்பிட்டிய, குறித்த நிறுவனத்திற்கு இந்த விடயம் தெரிந்திருக்க வேண்டும் எனவும், நீல நிற எரிவாயு கொள்களன் லிட்ரோ நிறுனத்திற்கு சொந்தமானதெனவும் குறிப்பிட்டார்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்க முடிய நிலை காணப்பட்ட போது, அவர்களுக்கு நாங்கள் மெர்கப்டன் உள்ளிட்டவற்றை வழங்கி உதவியிருந்தோம்.

இந்நிலையில் இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அதற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வரா? என தெரியாது.

எங்களிடம் இது தொடர்பான அறிக்கைகள் மற்றும் காணொளி காட்சிகள் உள்ளன.எவ்வாறாயினும். இந்த விடயம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், குறித்த காணொளியை அனுப்புமாறு கூறுகின்றார்.

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தெரியாமல் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அது தொடர்பில் அவர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு எதிராக எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தை நாடி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச். வேகப்பிட்டிய தெரிவித்தார்.

No comments: