News Just In

12/10/2021 06:33:00 AM

அறிகுறிகளின்றி ஒமிக்ரோன் மிகவும் வேகமாக பரவும் - விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேண

கொவிட் தொற்றுக்கான அறிகுறிகள் ஒமிக்ரோன் பரவலின் போது தென்படாது என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒமிக்ரோன் பிறழ்வானது அறிகுறிகளின்றி மிகவும் வேகமாக பரவக் கூடியது என்று விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேண தெரிவித்தார்.

எந்த பிறழ்வானாலும் அது பாரியளவில் பரவுவதற்கு இடமளிக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் , மேலும் பல பிறழ்வுகள் தோற்றம் பெறுவதை தவிர்க்க முடியாது.எனவே புதிய பிறழ்வுகளால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு முதல் இரு தடுப்பூசிகளைப் போலவே மூன்றாம் கட்ட தடுப்பூசியும் அத்தியாவசியமானதாகும் என்றும் வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேண சுட்டிக்காட்டினார்.

நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதோடு , நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பில் தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த செப்டெம்பர் மாதம் மத்தியப்பகுதி மற்றும் நவம்பர் வரை காணப்பட்ட நிலைமையை தற்போதைய நிலைமையுடன் ஒப்பிடும் போது தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தெளிவாக இனங்காணப்பட்டுள்ளது. இவ்வாறு இனங்காணப்படும் அனைத்து தொற்றாளர்களும் டெல்டா தொற்றுக்குள்ளானவர்களாவர்.

இவ்வாறான நிலையில் தற்போது நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளார். அவருக்கு எவ்வித தொற்று அறிகுறிகளும் தென்படவில்லை. இதே போன்று அறிகுறியின்றி அதிகளவான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடிய வாய்ப்புக்களும் அதிகமுள்ளன. இதற்கு அனைவரும் தயாராக வேண்டும்.கொவிட் வைரஸ் தொற்று இனங்காணப்பட்ட போது மணம் மற்றும் சுவையை உணர முடியாமை என்பன பிரதான அறிகுறிகளாகக் காணப்பட்டன.

எனினும் ஒமிக்ரோன் தொற்றில் இவை பிரதான அறிகுறிகள் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. எந்த பிறழ்வானாலும் அது பாரியளவில் பரவுவதற்கு இடமளிக்கப்பட்டால் மேலும் பல புதிய பிறழ்வுகள் உருவாகுவதை தவிர்க்க முடியாது.

எனவே அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு முதல் இரு தடுப்பூசிகளைப் போன்று, மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதும் அத்தியாவசியமானதாகும்.பைசர் இதற்கு சிறந்த தடுப்பூசி என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே எவ்வித அச்சமும் இன்றி பைசர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு அனைவரையும் அறிவுறுத்துகின்றோம் என்றார்.

No comments: