News Just In

11/13/2021 06:59:00 AM

எம்மைச் சுதந்திரமாக வாழ அனுமதியுங்கள் ! - முன்னாள் போராளிகள்

மூன்று தசாப்தகாலப் போருக்கான காரணம் என்ன? அதற்குரிய தீர்வுகள் எவை? என்பதை ஆராயாமல் பாதிக்கப்பட்ட சமூகத்தின் காயங்களுக்கு மருந்திடமுடியாது. கடந்தகாலத்தை மறந்துவிட்டு முன்நோக்கிப் பயணித்தல் என்பது நடைமுறையில் ஒருபோதும் சாத்தியமில்லை.

போரில் பங்கேற்ற இரண்டு தரப்புக்களில் தமிழ்த்தரப்பு தற்போது முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது. அரசாங்கம் 'வெற்றியீட்டிய தரப்பாக' இருந்துகொண்டு இப்பிரச்சினையை அணுகுகின்றது என்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் கண்ணீர்மல்க சாட்சியமளித்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏனைய சமூகங்களுக்கு இருக்கின்ற உரிமைகளைத் தமிழ்மக்களும் அனுபவிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்கும் அதேவேளை, இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் காணிகள் அவர்களிடம் மீளக்கையளிக்கப்படவேண்டும்.

குறிப்பாக போரில் உயிரிழந்த முன்னாள் போராளிகளை அவர்களது உறவினர்கள் நவம்பர் 27 ஆம் திகதியன்று நினைவிடங்களுக்குச்சென்று நினைவுகூருவதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடல் மற்றும் அவசியமான முன்மொழவுகளைச்செய்தல் ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாந்து மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச்செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த அமர்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் மற்றும் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோரின் வேண்டுகோளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளான செல்வநாயகம் அரவிந்தன், இராகிருஷ்ணன் பிரபாகரன், பாபு கஜேந்தினி மற்றும் பீலிக்ஸ் அன்ரன் கொலிக் ஆகிய நால்வரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டன.



No comments: