News Just In

11/26/2021 08:07:00 PM

கிண்ணியாவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை கண்டனத்துக்குரியதாகும் : ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

கிண்ணியாவில் கடந்த 2021.11.23ஆம் திகதி இடம்பெற்ற படகு விபத்து தொடர்பாக அறிக்கை இடுவதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் பலத்த கண்டனத்தை தெரிவிக்கிறது.

எமது மீடியா போரத்தின் அங்கத்தவர்களான சக்தி நியூஸ் பெஸ்ட் பிராந்திய ஊடகவியலாளர் எச். எம். ஹலால்தீன், தினகரன் பிராந்திய ஊடகவியலாளர்களான ஏ. எல்.எம். ரபாய்தீன மற்றும் அப்துல் சலாம் யாசீம் ஆகியோர் தம் கடமைகளை செய்து கொண்டிருக்கும்போது அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் ஊடகவியலாளரான அப்துல் சலாம் யாசீமின் கையடக்கத்தொலைபேசி பறிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் கிண்ணியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் தம் கடமையான படகு விபத்து மற்றும் அதனுடன் தொடர்பான விடயங்களை அறிக்கை விடுவதற்கு முற்பட்டபோதே தாக்கப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற முறையற்ற செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு இது தொடர்பாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சார்பில் கோருகிறது.

இதேவேளை, படகு விபத்துகுள்ளாகி பரிதாபகரமான முறையில் உயிரிழந்த சிறார்கள் உட்பட ஏனையோருக்காக பிரார்த்திப்பதுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அதன் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றது. இதுபோன்ற சம்பவங்களின் போது அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு உட்படும் ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை எவ்வித தடைகளுமின்றி செயற்பட ஒத்துழைப்பு வழங்குவது சமூகத்தின் கடமை என்றும் எமது மீடியா போரம் சுட்டிக்காட்டுகின்றது. ஒரு சில குண்டர்களின் இது போன்ற செயற்பாட்டினால் முழு சமூகமும் தலைகுனிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவது தவிர்க்க முடியாத என்பதையும் கவலையுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவிக்கின்றது.


No comments: