News Just In

11/27/2021 07:17:00 PM

டெஸ்ட் கிரிக்கெட்டை ஆளும் தமிழன்!

கான்பூர்; சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தமிழக வீரர் அஸ்வின், இன்று மேலும் 2 சாதனைகளை படைத்துள்ளார்.

மூன்றாவது நாள் ஆட்டம் தொடர்ந்த சிறிது நேரத்திலேயே, நியூசிலாந்து தொடக்க வீரர் வில் யங் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இதன் மூலம் நடப்பு ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இதற்கு முன் பாகிஸ்தான் வீரர் ஷகின் அபிரிடி அந்த இடத்தில் இருந்தார். தற்போது அபிரிடி வங்கதேச தொடரில் விளையாடி வருகிறார். இருப்பினும் அஸ்வினை மீண்டும் அவர் முந்த முடியாது. இதனைத் தொடர்ந்து அஸ்வின் துல்லியமாக பந்துவீசி, நியூசிலாந்து வீரர்களின் ரன்களை கட்டுப்படுத்தினார். அப்போது, ஜேமிசன் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இது சர்வதேச டெஸ்ட் அரங்கில் அவர் வீழ்த்தும் 415வது விக்கெட் ஆகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரமை அஸ்வின் பின்னுக்கு தள்ளினார்.

தற்போது அஸ்வின் 416 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் 2 விக்கெட்டை வீழ்த்தினால் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கை (417) அஸ்வின் பின்னுக்கு தள்ளிவிடுவார். அதனைத் தொடர்ந்து அவரது அடுத்த இலக்கு கபில்தேவை (434) பின்னுக்கு தள்ளுவதாகும். 35 வயதான அஸ்வின் இதுவரை 30 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் 3 ஆண்டுகள் அஸ்வின் விளையாடினால் கும்ப்ளேவின் (619) விக்கெட் சாதனையையும் முறியடித்துவிடுவார்.

No comments: