News Just In

11/19/2021 03:13:00 PM

சிவானந்தா தேசிய பாடசாலையின் புதிய மூன்றுமாடி அலுவலகக்கட்டடத் திறப்பு விழா!!

மட்டக்களப்பு கல்லடி - உப்போடை சிவாநந்தா தேசிய பாடசாலையில் “அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் கருத்திட்டத்தின் கீழ் கல்வியமைச்சினால் அமைக்கப்பட்ட புதிய மூன்று மாடியைக்கொண்டமைந்த சுவாமி விபுலானந்தர் அலுவலகக் கட்டடத் தொகுதியின் திறப்பு விழா இன்று 2021.11.19 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 - 9.30 வரையான சுபவேளையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் ந.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலங்கை இராமகிருஷ்ணமிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், பாடசாலையின் புதிய கட்டடத் தொகுதியினையும் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

அதேவேளை இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹராஜ், மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுஜாதா குலேந்திரகுமார், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலை வேலைப் பிரிவின் மாவட்டப் பொறியியலாளர் எந்திரி. அ.சுரேஸ்குமார் உள்ளிட்ட பழைய மாணவர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு செயலாளர் எஸ்.சந்திரகுமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இராமகிருஸ்ணமிஷன் வளாகத்திலிருந்து அதிதிகளுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, ஆரம்பமாகிய நிகழ்வானது மங்கள விளக்கேற்றப்பட்டு, அதிதிகளின் உரைகளைத் தொடர்ந்து, மாணவர் தலைவர்களுக்கு சின்னஞ் சூட்டப்பட்டதனைத் தொடர்ந்து நிறைவுற்றிருந்தது.

இந்நிகழ்வுகளில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அணிசாரா ஊழியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகலென மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.














No comments: