சீன உரம் குறித்த பரிசோதனை அறிக்கையில் உண்மையான தகவல்களையே வெளிப்படுத்தியுள்ளோம். இதன் போது ஏதேனுமொரு நாடு பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் நாம் அவதானம் செலுத்துவதில்லை. இது நாட்டையும் , நாட்டிலுள்ள தாவரவியலையும் பாதுகாப்பதற்கு எம்மால் நிறைவேற்றப்பட்டுள்ள கடமையாகும் என்று தேசிய தாவரவியல் தனிமைப்படுத்தல் சேவை நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி டபிள்யு.என்.ஆர்.விக்ரமஆராச்சி தெரிவித்தார்.
சீன உர கப்பலின் ஏற்றுமதியாளரினால் தேசிய தாவரவியல் தனிமைப்படுத்தல் நிறுவனத்திற்கு கடந்த 7 ஆம் திகதி 8 மில்லியன் நஷ்டஈடு கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. குறித்த கடிதம் புதன்கிழமை தமக்கு கிடைக்கப் பெற்றதாக தெரிவித்து அதற்கு பதிலளிக்கும் போது கலாநிதி டபிள்யு.என்.ஆர்.விக்ரமஆராச்சி இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், எமது நிறுவனத்தினால் சர்வதேச ரீதியில் பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு அமைவாகவும், உள்நாட்டு நடைமுறைகள் மற்றும் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவும் சீன இரசாயன உரம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதற்கு அமைவாகவே அறிக்கையும் வெளியிடப்பட்டது. அந்த நிலைப்பாட்டில் நாம் ஸ்திரமாகவுள்ளோம்.
தேசிய தாவரவியல் தனிமைப்படுத்தல் சேவை நிறுவனம் என்பது சட்டமூலமொன்றின் கீழ் செயற்படும் நிறுவனமாகும். இந்நிறுவனத்திற்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பற்றீரியா உள்ளிட்ட அபாயம் மிக்க நுண்ணுயிர்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதே எமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.
இதன் போது சகல இறக்குமதி நிறுவனங்களினாலும் இறக்குமதி செய்யப்படும் உரங்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் போது இறக்குமதி உரம் எந்த நாட்டிலிருந்து வருகிறது. எந்த நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் தேடிப்பார்ப்பதில்லை. எமக்கு அது அவசியமும் இல்லை.
இறக்குமதி செய்யப்படும் உரத்தில் ஏதேனும் அபாயம் மிக்க நுண்ணுயிர்கள் காணப்படுகிறதா என்பதை கண்டறிவதே எமக்கு முக்கியமானதாகும். அதற்கமைய எமக்கு கிடைக்கப் பெற்ற மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் அறிக்கையை விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கையளித்துள்ளோம்.
இதன் போது ஏதேனுமொரு நாடு பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் நாம் அவதானம் செலுத்துவதில்லை. நாம் உண்மையான தகவல்களையே வெளிப்படுத்தியுள்ளோம். இது நாட்டையும், நாட்டிலுள்ள தாவரவியலையும் பாதுகாப்பதற்கு எம்மால் நிறைவேற்றப்பட்டுள்ள கடமையாகும் என்றார்.
No comments: