News Just In

8/07/2021 07:42:00 AM

மட்டக்களப்பு கிரான் புலிபாய்ந்தகல் பால திருத்த வேலைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை...!!


(மட்டக்களப்புமொகமட்தஸ்.ரீப்)
மட்டக்களப்பு கிரான் பிரதேச மக்களின் நீண்டகால தேவையாக இருந்து வரும் கிரான் புலிபாய்ந்தகல் பாலத்தை விரைவாக திருத்தம் செய்து மக்கள் பாவனைக்கு உகந்த வகையில் புதிய பாலம் அமைக்கவும் புதிய வீதிகளை அமைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிமக்களும் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளும், பெருமளவு அரச அலுவலகங்களின் பணியாளர்களும் பயணிக்கும் இப்பிரதேசத்தில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள அனர்த்தத்தால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

இப்பிரதேசத்தில் பிரதேச செயலகம், கால்நடை அபிவிருத்தி திணைக்களம், விவசாய பணிமனைகள், மற்றும் அரச பாடசாலைகள் என்பன இயங்கிவருகின்றன. இப்பிரதேசத்தில் புலிபாய்ந்தகல், பொண்டுகள்சேனை, கோராவளி, பேரிலாவெளி, குடும்பிமலை, மியான்கல், அக்குறணை முறுத்தானை, ஈரலகுளம் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடிமக்கள் பயன்படுத்தும் பிரதான பாதையாகவும் இதுகருதப்படுகிறது.

அத்துடன் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெற்செய்கை பண்ணும் வயல் காணிகளும் இப்பிரதேசத்திலேயே அடங்கியிருக்கின்றன. நீண்டகாலமாக இம்மக்கள் பல்வேறு சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்ற போதிலும் கடந்தகாலங்களில் எந்த அரசாங்கமும் இதனை கருத்தில் கொள்ள வில்லை என பிரதேச மக்கள் பெரும் குறைபாடு தெரிவிக்கின்றனர்.

இப்பெரும் குறைபாடை தீர்க்கும் பொருட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இப்பாலம் மற்றும் வீதி அபிவிருத்தி வேலைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவரும் பொருட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் சகிதம் நேற்று இப்பிரதேசத்துக்கு விஜயம் செய்தார்.

இந்த விஜயத்தின் போது விரைவாக இப்பகுதியில் வெள்ளநீர் தேங்கி நிற்காதவாறு புதிய பாலம் அமைக்கவும் புதிய வீதிகளை அமைப்பது பற்றியும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நேற்று சாத்திய மதிப்பீடுகளை செய்துகொண்டார். இதன்படி வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்வைக்கும் சாத்திய திட்ட அறிக்கைக்கு அமைய விரைவாக அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து இந்த நீண்டகால மக்களின் தேவையை நிறைவு செய்யப் போவதாக ஊடகங்களுக்கு இராஜாங்க அமைச்சர் இங்கு கருத்து வெளியிட்டார்.

குறித்த பாலமும் வீதிகளும் அமைக்கப் படுவதன் மூலம் வெள்ள அனர்த்த காலங்களின் போது ஏற்படும் சேதங்களை தவிர்த்துக் கொள்ளவும் வெள்ள காலங்களில் அரச பணிமனைகளின் பணிகள் முடக்கப்படுவதை தவிர்த்துக் கொள்வதற்கும் வாய்ப்பு கிட்டுவதாக இராஜாங்க அமைச்சர் இங்கு தனது கருத்தில் மேலும் தெரிவித்தார்.

இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எஸ்.சிவகுமார் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் எந்திரி டி.பரதன் கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ் பாபு உள்ளிட்ட அதிகாரிகளும் இப்பிரதேச விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கிராம அமைப்புகளின் தலைவர்களும் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.











No comments: