News Just In

8/31/2021 07:54:00 AM

வெளிநாட்டுத் தலையீட்டினூடாகவே இந்த நாட்டில் நிலையான தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்- பா.உறுப்பினர் த.கலையரசன்


கடந்த காலங்களிலே தமிழ் மக்களை ஏமாற்றிய விடயங்களை தற்போது ஐநா சபை அறிந்துள்ளது. எனவே எதிர்காலத்தில் ஐநா சபை அல்லது வெளிநாட்டுத் தலையீட்டினூடாகத் தான் இந்த நாட்டில் நிலையான தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிகக்கையில்,

இன்று(நேற்று) உலகலாவிய ரீதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் நீண்ட காலமாக தமிழ் மக்கள் மத்தியிலே இருக்கின்ற பாரிய பிரச்சினையாக இது இருக்கின்றது. இதே அரசாங்கத்தினால் 2009ம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பில் இற்றைவரைக்குமாக எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் இந்த அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

இலங்கையில் வாழுகின்ற தமிழர்களை நாடு சுதந்திரம் அடைந்த கையோடு எவ்வாறு ஏமாற்றி வந்தார்களோ அதே பாணியில் இன்று சர்வதேசத்தையும் ஏமாற்றக் கூடிய வகையிலே அவர்களது செயற்பாடுகள் இருக்கின்றது. ஏனெனில் ஐநா சபையிலே இந்த நாட்டிலே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்ட பல விடயங்கள் கூட முன்னெடுக்கப்படவில்லை. தமிழ் மக்கள் சார்ந்த விடயங்கள் கூட இதய சுத்தியுடன் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லைல என்பதுதான் உண்மையான வெளிப்பாடு.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் காணாமல் ஆக்கப்பட்டோர் சம்மந்தமாக நீண்ட காலமாக அவர்களின் உறவுகளின் அமைப்பு முன்னெடுத்து வருகின்றது. ஆனால் அதிலே முன்னேற்றகரமான செயற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. எதிர்வருகின்ற மாதங்களில் ஐநா சபை கூட இருக்கின்றது. அதற்கு முன்னதாக ஏதாவது சில பணிகளை தாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம் என்று ஐநா சபையில் காண்பிப்பதற்காகவே வடக்கில் காரியாலயமொன்றினை உருவாக்கியிருக்கின்றார்கள். இது வெறுமனே கண்துடைப்பான ஒரு விடயமாகும்;.

ஏனெனில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இந்த நாட்டின் அமைச்சர்கள் கூட அவர்கள் காணாமல் ஆக்கப்படவில்லை வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள் போன்ற பொறுப்பற்ற விதமாகவே கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள். இந்த அரசாங்கம் எங்கள் மீது அக்கறையற்ற ஒரு சிந்தனையில் தொடர்ச்சியாக எங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இது உண்மையிலேயே ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயமல்ல.

எனவே மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையிலும் நீண்ட காலமாகத் தமிழ் மக்கள் இந்த நாட்டில் அனுபவிக்கின்ற துன்ப துயரங்களின் அடிப்படையிலும் எங்களுக்கு ஒரு நிலையான அரசியற் தீர்வு கிடைக்க வேண்டியது இந்த காலத்தின் கடப்பாடாக இருந்து வருகின்றது. தற்போதைய நிலையில் தமிழ் மக்களாகிய நாங்கள் ஒன்றுபட்ட சக்தியாக திகழந்து எமது மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு நிலையான தீர்வினைப் பெறுகின்ற வழியிலே பயணிக்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. அந்த அடிப்படையில் நாங்கள் செயற்பட வேண்டும்.

கட்சி ரீதியாகவும் நாங்கள் அவ்வாறான செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றோம். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீண்டகாலமாக ஐநா சபையில் தமிழ் மக்கள் சார்ந்த பல விடயங்களை முன்னெடுத்து தற்போது ஏதொவொரு வகையில் அவ்விடயங்கள் கையாளப்பட்டு முன்னேற்றகரமான செயற்பாடுகள் இடம்பெற்றுத் வருக்கின்றது.

கடந்த காலங்களிலே தமிழ் மக்களை ஏமாற்றிய விடயங்களை தற்போது ஐநா சபை அறிந்துள்ளது. எனவே எதிர்காலத்தில் ஐநா சபை அல்லது வெளிநாட்டுத் தலையீட்டினூடாகத் தான் இந்த நாட்டில் நிலையான தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். எமது காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உரிய தீர்வை பெறுவதற்காக எமது விடயங்களைக் கைளாளும் புலம்பெயர் அமைப்புகளும் அக்கறையுடன் செயற்படுகின்றன. அந்த அடிப்படைகளில் தான் ஒரு தீர்வு நிறைவேற்றப்பட வேண்டும்.

அவ்வாறானதொரு நிலையான தீர்வு எமது மக்களுக்குக் கிடைக்கவில்லை என்ற ஒரு நிலைமை இருக்குமானால் இந்த நாட்டிலே தமிழர்கள் வாழ்ந்ததற்கான எந்தவொரு அடையாளங்களும் இல்லாத ஒரு நிலைமையே ஏற்படும். ஏனெனில் தற்போதைய அரசாங்கம் ஆட்சியேற்றதில் இருந்து வடக்கு கிழக்கிலே அவர்கள் கையாளுகின்ற விடயங்கள் ஒவ்வொன்றும் தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்குகின்றதாகவே அமைகின்றன. கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட விடயங்களுக்குரிய தீர்வு இல்லாமல் புதிய புதிய விடயங்களை முன்னெடுத்து எம்மைப் பலவீனப்படுத்துகின்ற அல்லது எமது பிரதேசங்களில் இருந்து வெளியேற்றக் கூடிய வகையிலே கடந்த காலங்களில் ஆயுத ரீதியான அடக்குமுறையைச் செய்தவர்கள் தற்போது நிருவாக ரீதியான அடக்குமுறையைச் செய்கின்றார்கள்.

இந்த விடயங்களை அரசோடு இணைந்து பயணிக்கின்ற அரசியல்வாதிகள் அறிந்து இந்த மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டும். தங்கள் சுயநலத்திற்காக தற்போது அரசுடன் இணைந்து பயணித்தாலும் தாங்கள் தாமாகவே உணர்ந்து அரசில் இருந்து ஒதுங்கி எமது தமிழ் மக்களின் இருப்புகளைப் பாதுகாக்கின்ற விடயத்தில் எம்முடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments: