News Just In

8/05/2021 01:24:00 PM

புதையல் தங்கமெனக் கூறி போலித் தங்கத்தை 20 இலட்சத்துக்கு விற்க முற்பட்ட நபர் பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினரால் கைது...!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
புதையல் தங்கமெனக் கூறி அவற்றை ரூபாய் 20 இலட்சத்துக்கு விற்க முற்பட்ட நபர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் சங்கமன்கண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை மாலை 04.08.2021 இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் சங்கமன்கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய வேலுசாமி மஹிந்தகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

புதையல் தங்கமெனக் கூறி போலித் தங்கத்தை விற்பனை செய்வதாகக் கிடைக்கப்டபெற்ற இரகசியத் தகவலை அடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் விஷேட புலனாய்வுப் பொலிஸார் சம்பந்தப்பட்ட நபருடன் தங்க கொள்வனவாளர் போன்று தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இதன்போது தன்னிடம் உள்ள புதையல் தங்கத்திற்கு ரூபாய் இருபது இலட்சம் வழங்குமாறு போலி தங்கப் புதையல் நபர் கோரியுள்ளார்.

இதற்கு சம்மதித்த பொலிஸ் விஷேட புலனாய்வுப் பொலிஸார் சங்கமன்கண்டியிலுள்ள குறிப்பிடப்பட்ட இடத்திற்குச் சென்று இந்த நபரைக் கைது செய்துள்ளனர்.

அதன்போது சம்பந்தப்பட்ட நபரால் புதையல் தங்கமெனக் கூறப்பட்ட தங்கக்கட்டிகள் போன்று மின்னும் உலோகத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இது விடயமாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விஷேட புலனாய்வுப் பொலிஸார் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜராக்கவுள்ளதாகத் தெரிவித்தனர்.



No comments: