News Just In

7/30/2021 09:35:00 PM

மட்டக்களப்பு- பிறைந்துறைச்சேனையில் அதிகரித்து வரும் போதைப்பொருள் வியாபாரத்தை தடுக்க பொதுமக்கள் அதிதீவிரம்...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப்பொருள் வியாபாரம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக அப் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று (29) பிறைந்துறைச்சேனை முகைதீன் தைக்கா பள்ளிவாசலில் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட மக்கள் போதைப்பொருள் விற்பனையை இல்லாமல் செய்ய அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கிளந்தெழுந்தனர்.

பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப்பொருள் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்றன. போதை மாத்திரை விற்பனை செய்தவர்கள் ஐஸ் போதைப்பொருளும் கஞ்சா விற்பனை செய்தோர் கேரளா கஞ்சாவும், ஹெரோயினும் விற்பனை செய்து வருகின்றனர்.

அவர்களின் தொழில் ஒவ்வொரு நாளும் அபிவிருத்தியடைந்தே செல்கின்றன என்று அங்கு வந்த மக்கள் தங்களுடைய ஆதங்கங்களை அதிகாரிகள் முன் தெரிவித்தனர்.

இவ்வாறு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் நபர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அரசாங்கம் மற்றும் நிறுவனங்கள் வழங்கும் உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் வியாபாரத்தை இல்லாதொழிக்க நாங்கள் முன்வருகிறோம் அதற்கு பொலிஸாரும் அதிகாரிகளும் எங்களுக்கு ஒத்துழைப்புகளை தாருங்கள் என்று கூறி ஆண்களும் பெண்களும் குறித்த கூட்டத்தில் கிளர்ந்தெழுந்தனர்.

இக் கூட்டத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப் கான், வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், கல்குடா அல்கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.ஹாரூன் சஹ்வி, கிராம உத்தியோகத்தர் எம். அமானுல்லாஹ், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.இர்பான் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம், பிரதேச பள்ளிவாசல்கள் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.







No comments: