News Just In

7/12/2021 07:17:00 AM

அரசாங்கம் இன- மத வேறுபாடு காட்டுவதில்லை- ஓட்டமாவடியில் நீதி அமைச்சர் அலி சப்ரி...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
அரசாங்கத்தின் வேலைத்திட்டம் எந்தவித இன, மத, பேதமின்றியும் பிரதேச பாகுபாடின்றியும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஓட்டமாவடியில் (10) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
விசேடமாக நாங்கள் நூறு கிலோமீட்டர் வீதி வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். அதேபோன்று கிராம சேவகர் பிரிவுகளில் வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளோம். அத்தோடு ஆயிரம் தேசிய பாடசாலைகளை ஆரம்பிக்கவுள்ளோம்.

இந்த அரசாங்கம் கொரோனாவைக் காரணம் காட்டி அபிவிருத்திப் பணிகளை நிறுத்தவில்லை. கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் நாட்டுக்கு வந்துள்ளன. இன்னும் ஐந்து மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் வரவுள்ளன.

இந்த வருடத்துக்குள் இலங்கையிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி நாட்டுக்கு கிடைத்துள்ளது. அதை நாங்கள் வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பியுள்ளோம்.

இந்தியாவில் இருந்து படகுகளில் வருவோர் மூலம் டெல்டா வைரஸ் தாக்கும் என்பதால் அப்பகுதி மக்களின் நலன்கருதி முதலில் அந்த தடுப்பூசிகளை வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பியுள்ளோம்.

இலங்கை மக்களை பாதுகாக்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச முஸ்லிம், சிங்களம், தமிழ் என்று பார்ப்பது கிடையாது. அவர் இந்த நாட்டு மக்கள் என்று எண்ணியே பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்தநாட்டை ஜானாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் ஒரு நல்ல திட்டத்தோடு இலங்கையை கட்டியெழுப்புவார்கள். அதில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

ஒருபோதும் கொரோனாவைக் காரணம் காட்டி இந்த நாட்டின் அபிவிருத்திப் பணிகள் நிற்கப்போவதில்லை என்றார்.

No comments: