News Just In

7/28/2021 11:19:00 PM

அதிபர்- ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினைத் தீர்க்கக் கோரி பெல்மடுல்ல நகரில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி...!!


இன்றைய தினம் அதிபர்- ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினைத் தீர்க்கக் கோரி பெல்மடுல்ல நகரில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியில் இன மத மொழி பேதமின்றி பல்வேறு தொழிற்சங்கங்களும், பல்லாயிரக் கணக்கான ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு கடந்த 24 ஆண்டுகளாக தீர்க்கப்படாத அதிபர்- ஆசிரியர் சம்பள முரண்பாட்டினை தீர்த்தல், கொத்தலாவலை சட்டத்தை வாபஸ் பெறல், நிகழ் நிலைக்கல்விக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து இப்பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் உரையாற்றுகையில்: கடந்த 27/07/2021 அன்று சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் முகமாக அமைச்சரவை பத்திரம் ஒன்று வழங்கப்பட்டது. அப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததன் பிரகாரம் அச்சம்பளத் திட்டத்தை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் அதில் குறிப்பிடப்பட்டிருப்பது மிகச் சிறியளவிலான தொகையே ஆகும். 1997ஆம் ஆண்டு D.C பெரேரா ஆணைக்குழுவினால் சம்பள முரண்பாட்டைத் தீர்க்க முன்வைக்கப்பட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில்தான் எமது சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும்படி கோரிக்கை விடுத்திருக்கின்றோம். 

இவ் ஆணைக்குழுவில் குறிப்பிட்டதன் பிரகாரம் ஆசிரியர் தரம்-1 இற்கு அண்ணளவாக ரூபாய் 31,000 அளவில் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது எமக்கு வழங்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின்படி ரூபாய் 3,100 தான் அதிகரிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. எமது சம்பள உயர்விற்கான நியாயமான, சரியான தீர்வினை அரசாங்கம் வழங்கும் வரையில் எமது அதிபர்- ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் எனக் குறிப்பிட்டார்.













No comments: