News Just In

7/28/2021 11:07:00 PM

தலைவர் ஆபத்தில் இருக்கும் போது மக்கள் காங்கிரஸ் எம்.பிக்கள் மூவரும் அரசுடன் உல்லாசம் அனுபவிக்கின்றனர்- மனாப் சாடல்...!!


(நூருல் ஹுதா உமர்)
இலங்கை முஸ்லிங்களுக்கு அதிலும் குறிப்பாக இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு கெட்ட காலமாகவே இந்த காலம் உள்ளது எனலாம். தன்னால் உருவாக்கப்பட்டவர்களும், தன்னுடன் நட்பு பாராட்டியவர்களும் தனக்கு எதிராக செயற்படும் காலம் வரும் என்றும் எதிரிகளை விட துரோகிகளே மனதை கடுமையாக பாதிப்படைய செய்வார்கள் என்பதை இப்போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் அறிந்து கவலையடைந்திருப்பார் என நம்புகிறேன் என்று கல்முனை தொகுதி முக்கியஸ்தரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.அப்துல் மனாப் தெரிவித்தார்.

இன்று கல்முனை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர். மேலும் அங்கு பேசுகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தலைவருக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் அமைதியாக இருக்கிறார்கள். என்பதையும் தாண்டி யார் யாரெல்லாம் தலைவருக்கு துன்பம் விளைவிக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். இவர்களினால் தலைவரின் இன்றைய நிலைக்கு எதிராக ஒரு உரையை கூட நிகழ்த்தமுடியாமல், கண்டனத்தை கூட வெளியிட முடியாமல் இருப்பது கவலையளிக்கிறது. இப்படியான நிலை எங்களின் எதிரிகளுக்கும் வரக் கூடாது என இறைவனை பிராத்திக்கிறேன். எதிரிகளை விட துரோகிகள் கொடுமையானவர்கள் என்பதை அவர்கள் எங்களுக்கு இப்போது காட்டியுள்ளார்கள்.

சட்டமொழுங்கு செய்யவேண்டிய வேலையை செய்துகொண்டிருக்கும் போது அரசியல் ஆதாயம் தேடி வீதியில் கூப்பாடு போடும் மலையக மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் மனதில் இவ்வளவுகாலமும் வைத்திருந்த கசடை இப்போது வெளியிறக்கியுள்ளனர். ஒரு சகோதரனுக்கு அநீதி நடைபெறுவதை பார்த்துக்கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் மௌனம் காத்திருக்கும் இந்த வேளையில் இறைவனை நாங்கள் துணைக்கு அழைத்துள்ளோம். இந்த பிரச்சினைகளுக்கு பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுக்கள் விரைவில் அவிழ்க்கப்பட்டு உண்மைகள் வெளிவரும். சதிகாரர்களுக்கெல்லாம் சதிகாரன் இறைவன் இருக்கிறான் என்பதையும் இறைவன் நீதியானவன் என்பதையும் தூரோகிகளும், எதிரிகளும் விரைவில் அறிவார்கள் என்றார்.

No comments: