News Just In

6/10/2021 11:34:00 AM

மட்டக்களப்பு- மண்முனை வடக்கில் சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாக முன்னெடுப்பு!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 25,000 தடுப்பூசிகள் முதல் கட்டமாக கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் மூன்றாவது நாளாகிய இன்று வியாழக்கிழமை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஊறணி சரஸ்வதி வித்தியாலயம் மற்றும் பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகிய இடங்களில் தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குள் தொற்றாளர்கள் அதிகமாக இனங்கானப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பகுதிகளான சின்ன ஊறணி மற்றும் பாலமீன்மடு ஆகிய பகுதிகளில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன் தலைமையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் குறித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஏற்றப்பட்டு வருகின்றது.

குறித்த கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இத்துடன் மட்டக்களப்பு பிரதேசத்தில் தேவையின்றி வெளியில் நடமாடும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மட்டக்களப்பு பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

கல்லடி பாலத்திற்கு அருகில் விசேட பொலிஸ் கண்காணிப்பு பிரிவானது தேவையின்றி வெளியில் நடமாடியவர்களையும் மட்டக்களப்பு நகருக்குள் உள்நுழைய முயன்றவர்களையும் எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.





















No comments: