News Just In

6/08/2021 11:32:00 AM

மட்டக்களப்பில் இன்று ஆரம்பமானது கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(08) முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகியது.

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்த தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ந. மயூரன், மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிப்பாளர் வைத்தியர் இ. உதயகுமார், இராணுவ உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

குறித்த தடுப்பூசிகளை மக்களுடன் நேரடி தொடர்பினை பேணும் அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள், அதிகளவில் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் முதற்கட்டமாக 1000 பேருக்கான கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையம் ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்டதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று காலை, ஆரம்பித்து வைக்கப்பட்டன. குறித்த நிலையத்தில் முதற்கட்டமாக 700 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

குறித்த தடுப்பூசி திட்டத்தில் முதற்கட்டமாக பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், மாநகர உள்ளூராட்சி மன்ற உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட மக்களுடன் நேரடித் தொடர்பினை பேணுபவர்களுக்கு ஏற்றப்படுகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை பார்வையிட வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் குறித்த அலுவலகங்களின் ஊடாக ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுகளிலும் மக்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
















No comments: