News Just In

6/22/2021 10:27:00 AM

திருகோணமலை மாவட்டத்தில் 1,400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது...!!


எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி ஏற்றும் முதலாவது நிகழ்வு நேற்று (21) கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.றிஸ்வி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வில், திருகோணமலை பிராந்திய தாய்,சேய் நல வைத்திய அதிகாரி டொக்டர் எச்.எம். சமீம் கிண்ணியா தள வைத்தியசாலை மகப்பேற்று நிபுணர் குன்சிறி குணதிலக்க கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது திருகோணமலை பிராந்திய தாய், சேய் நல வைத்திய அதிகாரி கருத்து தெரிவிக்கையில்:

திருகோணமலை மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த பாதிப்பில் கிண்ணியா சுகாதாரப் பிரிவும் உள்ளடங்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இங்கிருந்து ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் 1,400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இதில் கிண்ணியா சுகாதாரப் பிரிவில் 250 கர்ப்பிணி தாய்மார்கள் தடுப்பூசிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சகல கர்ப்பிணித் தாய்மார்கள் இந்த தடுப்பு ஊசியை கட்டாயம் செலுத்த வேண்டும் எனினும் தடுப்பூசியின் தற்போதைய இருப்பை கருத்திற்கொண்டு மிக எளிதில் பாதிக்கக்கூடியதும் ஆபத்தான நிலையை அடையக்கூடிய கர்ப்பிணித் தாய்மார்களும் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.

கொரோனா தொற்றுள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு கருச்சிதைவு, குறைமாத பிரசவம், குழந்தை இறந்து பிறத்தல் போன்றவை ஏற்படலாம். எனவே இவற்றைத் தவிர்த்துக் கொள்வதற்கு கட்டாயம் தடுப்பூசி ஒரு கர்ப்பிணித் தாய்மார்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.றிஸ்வி கருத்து தெரிவிக்கையில்:

35 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் ஏழு மாத கர்ப்பிணி தாய்மார்கள், அபாயம் தோற்றுவாய் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள், தொற்றா நோய் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள், வெளிக்கள உத்தியோகத்தர்களாக பணிபுரியும் கர்ப்பிணி தாய்மார் அத்துடன் உடற்பருமன் கூடிய கர்ப்பிணி தாய்மார்களையும் தெரிவு செய்து தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திடுக்கிறோம்.

கிண்ணியா பிரதேசத்தில் அதிகரித்த கொரோனா தாக்கம் கடந்த ஒரு வார காலமாக திடீர் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. இதற்கு காராணம் பொது மக்களின் ஒத்துழைப்பே ஆகும்.

ஜூன் 8 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி பற்றிய அச்ச உணர்வு காணப்பட்ட போதிலும் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் அதிகமானவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டியதைக் காணக்கூடியதாக இருந்தது.
இதன் காரணமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் 80 சத வீதமானவர்களுக்கு தடுப்பூசிகள் கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.




No comments: