News Just In

5/02/2021 06:27:00 PM

மட்டக்களப்பு திசவீரசிங்கம் சதுக்கம் மேற்கின் மூன்று குறுக்கு வீதிகளை முற்றாக முடக்குவதற்கு தீர்மானம்!!


(கல்லடி நிருபர்)
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திசவீரசிங்கம் சதுக்கம் (மேற்கு) கிராம உத்தியோகத்தர் பிரிவின் 3 குறுக்கு வீதிகளை முற்றாக முடக்குவதற்கான தீர்மானத்தினை மேற்கொண்டு, தேசிய கொவிட் தடுப்பு செயலணிக்கு பரிந்துரை செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தெரிவித்திருந்தார்.

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் சிகிட்சை பெறுவதற்காக திசவீரசிங்கம் சதுக்கம் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் சென்றிருந்த போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையின் அடிப்படையில் குறித்த நபர் கொவிட் தொற்றுக்குள்ளாகியது உறுதிப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, குறித்த நபர் வசித்த பகுதிக்குச் சென்ற சுதாதாரத் தரப்பினர் எழுமாறாக 24 பேருக்கு மேற்கொண்ட பீசிஆர் பரிசோதனைகளில் 11 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து இன்று (02) திகதி அவசரமாக கூடிய மட்டக்களப்பு மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி இது தொடர்பில் ஆராய்ந்த போது இன்று கிடைக்கப் பெற்றுள்ள அறிக்கைகளின் படி மொத்தமாக நேற்றைய தினம் 32 பேர் கொவிட் நோயாளர்களாக இனங்கானப்பட்டுள்ளனர்.

அதில் 12 பேர் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், நான்கு பேர் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், எட்டுப் பேர் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், இரண்டு போர் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், ஐந்து பேர் ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்தவர்களாகவும், ஒரு பொலிஸ் உத்தியோகத்தருமாக இனங்கானப்பட்டதைத் தொடர்ந்து, இது தொடர்பில் ஆராய்ந்த போது உடனடியாக திசவீரசிங்கம் சதுக்கம் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக கொவிட் செயலணிக்கு சிபாரிசு செய்வதென ஏகமனதாக முடிவெடுத்து, உடனே அந்த முடிவு செயலணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதே வேளை கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சரால் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்ட வழிகாட்டல் குறிப்பிற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தியிருந்ததுடன், இருந்த போதிலும் அந்த வழிகாட்டல் குறிப்பை சற்று இறுக்கமாக்கி கடந்த முதலாம் திகதியில் இருந்து சுகாதார துறை பணிப்பாளர் அவர்களினால் மேலும் ஒரு வழிகாட்டல் குறிப்பு நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு இணங்க அதில் சில விடயங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆலயங்களிலே ஒன்று கூடுதல், மதவழிபாடுகளில் கூட்டுப் பிரார்த்தனைகளில் ஈடுபடுதல், தனியார் வகுப்புக்களை நடாத்துதல் போன்ற பல விடையங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த 50% வீதமானது 25% வீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஏன் என்றால் வழி காட்டல் குறிப்புகள் நாட்டின் மாறிவருகின்ற சூழலுக்கு ஏற்ப மாற்றமடைந்து கொண்டு வருகின்றது அதனையும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தெரிவிக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

இந்த மாதம் றமழான் மாதம் என்பதால் பள்ளிவாசல்களிலே கூட்டாக தொழ முடியாது, பிரத்தியேக வகுப்புகள் நடாத்த முடியாது, சமய வகுப்புக்கள் நடாத்த முடியாது, மரணச் சடங்குகளிலே 25 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும், அதுவும் கொவிட் அல்லாத மரணம் சம்பவித்தால் 24 மணித்தியாலத்திற்குள்ளே இறுதிக் கிரிகைகள் நடாத்தப்பட வேண்டும். இவ்வாறான பல கட்டுப்பாடுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல் குறிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்திருந்தார்.

இன்று அவசரமாக இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க, இராணுவ அதிகாரி ஏரீம்.தர்மவர்த்தன (Co),
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.தயாபரன், மட்டக்களப்பு பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன், உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.






No comments: