News Just In

5/02/2021 09:55:00 AM

சாணக்கியனின் அறிவிப்புக்கு மௌனம் காத்துவரும் மு.கா முக்கியஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க முஸ்தீபு- மாநகர சபை உறுப்பினர் அமீர் அறிவித்தார்!!


நூருல் ஹுதா உமர்
சாணக்கியன் அண்மையில் முஸ்லிங்களின் குரல்வளையை நோக்கி வீசியிருக்கும் கருத்துக்கு அவரது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு ஆதரவு வழங்கிய முன்னாள் எம்.பி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பது ஏன்? மௌனமாக இருந்து அவரின் வடகிழக்கு இணைப்பை ஆதரிக்கிறீர்களா? கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் அவரை ஏற்றுக்கொள்கிறீர்களா? வாய்திறக்காமல் மௌனம் காப்பதில் என்ன மர்மம் ஒழிந்துள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ. அமீர் கேள்வியெழுப்பினார்.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்குமுகமாக முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை கட்சி காரியாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு ஆதரவு வழங்கி விட்டு சாணக்கியனின் கருத்துக்கு மௌனம் காத்துவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆகியோரை உயர்பீடத்தில் கேள்விக்குட்படுத்துமாறு கோரி தலைவரின் இணைப்பாளரூடாக திறந்த அறிக்கையை மக்கள் பிரதிநிதியாக உள்ள நாங்கள் அனுப்ப உள்ளோம். அத்துடன் இந்த பேரணிக்கு ஆதரவளித்த மக்கள் காங்கிரசின் முன்னாள், இந்நாள் பிரதேச சபை தவிசாளர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க முன்வரவேண்டும்.

கடந்த பல வருடங்களாக பேசு பொருளாக மாறியிருக்கும் கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் எனும் கோரிக்கை எதிர்வரும் நான்காம் திகதி மலரப்போவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், ஜனார்த்தன் மற்றும் சுமந்திரன் உட்பட பலரும் அண்மையில் கல்முனை உப பிரதேச செயலகத்தில் வைத்து கூறியுள்ளார்கள். கல்முனையில் வாழும் எங்களிடம் எவ்வித தீர்க்கமான தீர்மானங்களும் இல்லாத பொழுதில் எங்களின் புரிந்துணர்வையும், ஒற்றுமையையும் சீரழிக்கவே இவ்வாறான நடைமுறை சாத்தியமற்ற கதைகளை கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

கல்முனை பிரதேசத்தில் வாழும் மருதமுனை, நற்பிட்டிமுனை மக்களுக்கு அவர்களின் வரைபடத்தில் வழங்கியுள்ள இடத்தை தெளிவாக அவர்கள் பகிரங்கப்படுத்த வேண்டும். தமிழ் மக்களின் நியாயபூர்வமான எந்த போராட்டத்திற்கும் முஸ்லிங்கள் தடையாக இருந்ததில்லை. எங்களால் முடிந்த பல ஆதரவுகளையும் வழங்கியே வந்துள்ளோம். காலிமுகத்திடலில் மூத்த தமிழ் தலைமைகளினால் நடத்தப்பட்ட தமிழ் சமூக உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்வரிசையில் அமர்ந்து ஆதரவளித்த செனட்டர் மசூர் மௌலானா முதல் தமிழர்களுக்கு ஆதரவளித்த பல தலைவர்களும் முஸ்லிம் சமூகத்தில் இருக்கிறார்கள். கல்முனை மாநகர சபையில் நினைவுகூரப்பட்ட மாவீரர் தின நிகழ்விலும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாங்கள் தடைபோட வில்லை. கல்முனையில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களாகிய நாங்கள் எங்களுக்குள் புரிந்துணர்வுடன் நடந்திருக்கிறோம். தொழில், அபிவிருத்தி என எதுவாக இருந்தாலும் சரியே. அதற்கு சாட்சியாக கல்முனை மாநகர தமிழ் உறுப்பினர்களே இருக்கிறார்கள். மட்டக்களப்பு மற்றும் பல வெளி மாவட்ட தமிழ் எம்.பிக்களே கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தலை பேசுபொருளாக்கி அரசியல் செய்கிறார்கள். இது தேர்தல் கால நாடகங்களே தவிர வேறில்லை.

மாகாண சபை தேர்தலை முன்னிட்டும், சாணக்கியன் தனது முதலமைச்சர் கனவை அடையவும் தான் இவ்வாறான அறிக்கைகளை விட்டுக்கொண்டு மக்களை குழப்புகிறார்கள். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் இவர்கள் அடைந்த நன்மை தான் என்ன? அண்மைய ஜெனிவா விவகாரம் நல்ல படிப்பினையாக அமைந்துள்ளது. என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமாக இருந்தாலும் சரி பிரதித்தலைவர் எச்.எம்.எம். ஹரீஸாக இருந்தாலும் சரி அடிமட்ட மக்கள் பிரதிநிதியாக உள்ள எங்களிடம் மக்கள் கூறும் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்ட கடிதங்களின் பிரகாரமே தமது நிலைப்பாட்டை அறிவிக்கிறார்கள். தமிழ் மக்களின் வழமையான போராட்டங்களுக்கு ஆதரவளிப்பது போன்றே நாங்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கும் ஆதரவளித்தோம். ஆனால் அவர்கள் இப்படி நம்பிக்கை துஸ்பிரயோகம் செய்வார்கள் என்று நாங்கள் நம்பவில்லை என்றார்.



No comments: