News Just In

5/24/2021 07:04:00 AM

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் இன்று புயலாக மாற்றமடையும் சாத்தியம்- எச்சரிக்கை...!!


வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் இன்று திங்கட்கிழமை புயலாக மாற்றமடையக்கூடுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயலானது வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து 26 ஆம் திகதி மேற்கு வங்க கடற் பிராந்தியத்தை கடக்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு அந்தமான் கடல் பிரதேசம் மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா கடல் பிரதேசத்திலும் கடல் திடீரென கொந்தழிப்புடன் காணப்படுவதுடன் இடியுடன் கூடிய மழையும் பெய்யலாம் என்றும் 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 3 நாட்களுக்கு இவ்வாறு சீரற்ற காலநிலை தொடரும் என்பதால், வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியிலும் அதனையடுத்து நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் விரைவாக கரைக்குத் திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்குத் செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்தோடு மேல், சம்பகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலிருந்து இன்றிலிருந்து நாளை மறுதினம் புதன்கிழமை 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதற்கமைய இன்றை தினம் இம் மாகாணங்களில் 100 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சியும் , நாளை மற்றும் நாளை மறுதினங்களில் 150 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சியும் பதிவாகக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரை கடற் பிரதேசங்களில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

சில இடங்களில் கன மழை பெய்யக் கூடும். இதே வேளை சிலாபம் தொடக்கம் புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை மற்றும் காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 55 - 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும்.

இவ்வாறு சீரற்ற காலநிலை நிலவும் போது ஏற்படக் கூடிய பாதிப்புக்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

No comments: