News Just In

5/18/2021 11:38:00 AM

காரைதீவில் கூடிய விசேட அமர்வு- பிரேரணை நிறைவேற்றம், நிறைய உறுப்பினர்கள் சமூகமளிக்க வில்லை...!!


மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர்
கடந்த வாரம் நடைபெற்ற காரைதீவு பிரதேச சபையின் 39 வது சபை அமர்வில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஐந்து உறுப்பினர்கள் ஆதரவாகவும், ஆறு உறுப்பினர்கள் நடுநிலையாகவும், ஒருவர் எதிராகவும் வாக்களித்தமையால் அது தொடர்பில் உள்ளுராட்சி ஆணையாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் போன்றரிடம் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டபோது அது தோல்வியாக கருதமுடியாது என்றனர். 

மக்களுக்கு சேவை செய்ய வேண்டி வந்தவர்கள் இப்படியான விடயங்களில் மக்கள் ஆணைக்கு விரோதமாக செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த விடயம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியில் பிழையான செய்திகளை ஒளிபரப்பினார்கள். ஊடகவியலாளர்கள் இப்படியான பொய்யான செய்திகளை பிரசுரிப்பதை தவிர்த்து நடுநிலையுடன் நடந்துகொள்ள வேண்டும். இதனால் எங்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்பட்டது. இது அரசியல் செய்யுமிடமில்லை. அதிகாரங்கள் செயற்படுத்தப்படும் இடம் என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி. ஜெயசிறில் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று காலை சபா மண்டபத்தில் அவருடைய தலைமையில் நடைபெற்ற போதே அவர் தனதுரையில் இவ்வாறு தெரிவித்தார். 12 உறுப்பினர்களை கொண்ட இந்த சபை அமர்வில் 05 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் எச்.எச்.எம். இஸ்மாயில், எம்.என்.எம். றணீஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எஸ். ஜெயராணி, எஸ். சசி ஆகியோருடன் தவிசாளர் ஆகியோர் மட்டுமே இந்த அமர்வில் கலந்து கொண்டதுடன் ஏனையோர் கொரோனா காரணமாகவும், ஏனைய சில காரணங்களினாலும் இந்த அமர்வில் கலந்துகொள்ள வில்லை என தவிசாளர் இங்கு தெரிவித்தார். மேலும் தனது உரையில்

கடந்த காலங்களில் இந்த சபை நாகரீகமாகவும், கண்ணியமாகவும் நடந்துள்ளது. மூடிய அறைக்கு குளிரூட்டி பொருத்துவதில் யாருக்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாது என்றாலும் வேறு காரணங்களுக்காக உறுப்பிப்பினர்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள். நாகப்பாம்புக்கே பயப்படாத நான் நாக்குளி பாம்புகளுக்கு ஒரு போதும் பயப்பட போவதில்லை. நான் இங்கு அரசியல்வாதி இல்லை ஒரு அதிகாரி. என்னுடைய செயற்பாடுகளை இதயசுத்தியுடன் நிறைவேற்றியுள்ளேன். இங்கிருக்கும் சில உறுப்பினர்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் சட்டதிட்டங்கள் தெரிவதில்லை. இந்த சபைக்கு ஆளுமையான சிலரை மக்கள் தெரிவு செய்திருந்தாலும் ஆறுதல் பரிசில் வந்த சிலர் விளம்பர அரசியலையே செய்துகொண்டிருக்கிறார்கள்.

பிரதேச சபை எல்லைக்குள் மின்சார கம்பங்களில் ஒரு உறுப்பினரின் பெயர் தொங்கிக்கொண்டிருக்கிறது, மாதாந்த கொடுப்பனவில் அதை செய்தேன், இதை செய்தேன் என விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார். இவர்களினால் காரைதீவு மண்ணுக்கு அவமானம் வராமலிருக்க வேண்டும். இந்த சபையை சீராக கொண்டுசெல்ல உதவுபவர்களுக்கே சலுகைகளையும், சேவைகளையும் வழங்க உள்ளேன்.

இன்று காலமான தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அம்பாறை மாவட்டத்திற்கும் காரைதீவு பிரதேசத்திற்கும் தனது பதவிக்காலத்தில் நிறையவே நிதியுதவிகளையும், ஒதுக்கீடுகளையும் அவர் செய்துள்ளதை நன்றியுடன் இங்கு நினைவு கூறுகிறேன். தனக்கு எழுந்த விமர்சனங்களை கடந்து அரசின் அழுத்தங்கள், நெருக்கடிகளை தாண்டி பயணித்த அவர் இன்று கொரோனா தொற்றில் இறந்த செய்தி கவலையளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் என்றார்.

விசேட பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் எஸ். ஜெயராணி, சென்ற அமர்வில் உத்தியோகத்தர்களுக்கான தளபாடம் வழங்காமை, மக்களுக்கான வாழ்வாதாரம் வழங்காமை காரணமாகவே தான் நடுநிலை வகித்ததாகவும் இப்போது இந்த குளிரூட்டியின் அவசியம் கருதி இந்த பிரேரணையை முன்மொழிவதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்தும் மக்களின் நன்மைகருதி தனது பிரதேச மக்காளுக்காக மின்விளக்கு வசதிகளை செய்து தருமாறு வேண்டிக்கொண்டார். பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். றணீஸ் அந்த பிரேரணையை வழிமொழிய சபை அமர்வில் கலந்துகொண்டிருந்த சகல உறுப்பினர்களும் ஏகமனதாக அந்த பிரேரணையை ஆதரித்தனர். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (இரண்டு உறுப்பினர்கள்), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ஒருஉறுப்பினர்), கோயில் சார்பில் நியமிக்கப்பட்ட சுயட்சை குழு (இரண்டு உறுப்பினர்கள்), பள்ளிவாசல் சார்பில் நியமிக்கப்பட்ட சுயட்சை குழு உறுப்பினர் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்கள் அடங்கலாக ஏழு உறுப்பினர்கள் இந்த அமர்வில் கலந்துகொள்ள வில்லை என்பது குறிப்பிடதக்கது.






No comments: