News Just In

5/08/2021 03:30:00 PM

மன்னாரில் 8 நாட்களில் 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்- மக்களுக்கு எச்சரிக்கை...!!


மன்னார் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் கடுமையான சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறு மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவுக்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன் சுதாகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று சனிக்கிழமை (8) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 
மன்னார் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 461 பி.சி.ஆர்.பரிசோதனைகளின் அடிப்படையில் கொழும்பில் மேற்கொள்ள பரிசோதனைகளுக்கு அமைவாக முதல் கட்டமாக 7 கொரோனா தொற்றாளர்களும், நேற்று வெள்ளிக்கிழமை 15 தொற்றாளர்களுமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களின் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் தலைமன்னார் பியர், மன்னார் பள்ளிமுனை மற்றும் மன்னார் நகர பஸார் நிலைய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் 370 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் நகரத்தில் வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுகின்றவர்களும், வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும் உரிய முறையில் கொரோனா தடுப்பு நடை முறைகளையும், சுகாதார நடைமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.

உரிய முறையில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள், நிறுவனங்கள் மீது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே மக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மேலும் நேற்று வெள்ளிக் கிழமை(7) 150 பி.சி.ஆர். பரிசோதனைக்காக முல்லேரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு இரணை தீவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள பி.சி.ஆர்.பரிசோதனைக்கான அறிக்கையும் எதிர் பார்க்கப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் கடுமையான சுகாதார நடை முறைகளை கடைபிடித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: