News Just In

5/23/2021 08:06:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- ஒருவர் உயிரிழப்பு...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாத்திரம் 54 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் இன்று ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தார்.

இதில், களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 11 பேருக்கும், மட்டக்களப்பு பிராந்தியத்தில் 17பேருக்கும், காத்தான்குடி பிரதேசத்தில் 6 பேருக்கும், ஏறாவூர் பிரதேசத்தில் 5 பேருக்கும், செங்கலடி பிரதேசத்தில் 4 பேருக்கும், கிரான் பிரதேசத்தில் 2 பேருக்கும், ஓட்டமாவடியில் ஒருவருக்கும், கோறளைப்பற்று மத்தியில் ஒருவருக்கும், பட்டிப்பளையில் 2 பேருக்கும், வவுணதீவில் ஒருவருக்கும், ஆரையம்பதியில் 3 பேருக்கும், பொலிஸ் அதிகாரி ஒருவருக்குமாக மொத்தம் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வாழைச்சேனையில் மூன்று மாத கர்ப்பிணி ஒருவருக்கும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் கொரோனா தொற்றால் இன்று காத்தான்குடியை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆடைத்தொழிற்ச்சாலை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கல்லாறு வைத்தியசாலையில் கொரோனா தொற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவு சரியில்லை என கூறப்பட்ட நிலையில் இன்று 40 பேர் இணைந்து வழங்கிய கடிதத்தின் அடிப்படியில் நாளை முதல் புதிய உணவு வழங்குநர் ஊடாக அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினை முற்றாக ஒழிப்பதற்கு மாவட்ட மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும், சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி கொரோனா தொற்றை முற்றாக ஒழிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

No comments: