News Just In

4/22/2021 07:54:00 AM

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் முன்னாள் அமைச்சருமான, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் உரையாடல்...!!


நூருல் ஹுதா உமர்
(மாளிகைக்காடு நிருபர்)
இலங்கை அரசியலில் தேசிய காங்கிரசின் தற்கால நிலை:-
சிறுபான்மை சமூகம் அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் ஏமாற்றுகின்றவர்களின் கையில் தொடர்ந்து இருக்க முடியாது. தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் எங்கள் பிரதேசத்தில் அரசியல் செய்த அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் எவ்வாறு அரசியல் செய்தார்கள் என்பதை யாரும் மறந்து விட முடியாது. எதுவாக இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு கையுயர்த்தும் எமது அரசியல்வாதிகளின் பழக்கத்திலுந்து அவர்களை விடுவிக்க முடியாது. கையுயர்த்திய பின்னர் அவர்கள் கூறும் நியாயத்தை கேட்டுக்கேட்டு எமது காதுகள் புளித்துபோகி விட்டது. கடந்த 19ம் சட்டமூலம் 20ம் சட்டமூலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலை என்ன என்பதை அலசி ஆராய்ந்தால் நாம் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியும். மஹிந்த ராஜபக்ச அவர்களையும் கோத்தாபய ராஜபக்ச அவர்களையும் தேர்தல் காலங்களில் தொடர்ந்தும் எதிர்த்து எதிர்த்து பிரச்சாரம் செய்து அவர்களையும், சிங்கள மக்களையும் கோபமாக்கியவர்கள் இன்று பைல்களை தூக்கி கொண்டு அவர்களின் பின்னால் அலைகிறார்கள். நாம் கூறிய உண்மைகள் இப்போது விளங்க ஆரம்பித்துள்ளதால் நிம்மதியாக இருக்கலாம். அஸ்ரப் அவர்கள் விட்ட இடத்திலிருந்து சமூகத்தை வழிநடத்தும் நல்ல எண்ணத்துடன் நாங்கள் பயணித்தமையினால் தான் எங்களுக்கு தோல்வி என்பது இல்லை.

நாங்கள் கடந்த தேர்தலில் ஒரு கட்சியில் இணைந்து செல்ல எண்ணினோம். ஆனால் இறைவன் தடுத்து வேறுவழியை காட்டினான் அதனால் தான் இன்று நாங்கள் குதிரையில் போட்டியிட்டு தனிக்கதிரையில் இருக்கிறோம். அதனால் நாங்கள் எதனையும் எப்போதும் பேச முடியும். யாரையும் உயர்த்தி பேசி நன்மை அனுபவிக்கும் நிலையில் தேசிய காங்கிரஸ் எப்போதும் இருக்காது. தேசிய காங்கிரஸ் காலத்திற்க்கு ஏற்றவையை மட்டும் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்கும். அதனால் தான் கடந்த காலத்தில் பிரிந்து சென்ற மைத்திரியை திரும்பவும் இணைக்கும் வாய்ப்பை தேசிய காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் ஏற்படுத்தி கொடுத்தோம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் உண்மையின் பக்கம் நின்று முஸ்லிங்கள் சிங்கள மக்களின் நன்மதிப்பை பெற்ற கோத்தாவின் பக்கம் வருமாறு அழைத்தோம். இந்த அரசாங்கத்துடன் நீண்டகாலமாக பயணிக்கும் நாங்கள் இப்போதும் தொடர்பில் இருக்கிறோம். ஆனாலும் நாங்கள் எங்கள் சமூகத்தின் அபிலாசைகளை செய்யவே அதனை தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறோம்.

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய மண் தான் சிறந்த இடம்
இன்று அரசியல் ரீதியாக பல்வேறு கதையாடல்கள் இருக்கிறது. ஜனாஸா நல்லடக்கம், எரித்தல் விடயத்தில் சிலர் தனி அரசியலை மட்டுமே செய்தார்கள். தேசிய காங்கிரசுக்கு அரசியல் செய்யும் தேவை அதில் இருக்கவில்லை. மரணித்த ஒரு முஸ்லிமின் மீது மற்றைய முஸ்லிங்களுக்கு குளிப்பாட்டுதல், கபனிடுதல், தொழுவித்தல், அடக்குதல், என கட்டாய கடமைகள் இருக்கிறது. கொரோனா தொற்றுள்ள ஜனாஸாக்கள் விடயத்தில் அந்த "பர்ளு ஹிபாயாவை" நிறைவேற்றும் சிந்தனையுடனையே தேசிய காங்கிரஸ் தொடர்ந்தும் இருந்தது.

மண்ணில் கொரோனா தொற்றுள்ள உடலை அடக்கினால் அந்த மண் அந்த வைரஸை அப்படியே வாங்கி அதை அப்படியே வைத்திருந்து நீரிலும் கலந்து விடும் என்று தான் அந்த உடல்களை எரிக்கும் தீர்மானங்களை எடுத்தார்கள். அதுதான் இலங்கை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களின் தீர்மானமாக இருந்தது. அப்போது எங்களின் நிலைப்பாடாக இருந்த மண் தொடர்பிலான விடயங்களை ஆழமாக எடுத்துரைத்தோம். எரியூட்டலினால் சூழல் மாசடைவதை காட்டிலும், பொருளாதார சிக்கலை தொற்றுவிக்கும் எரித்தலை காட்டிலும் எவ்வளவு கழிவுகளையும் மண்ணில் கொட்டினாலும் மண் அதன் தன்மைகளை இழக்காது இருக்கும் எனும் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தோம். நீரை வடிகட்டும் தொழிற்பாட்டில் மண்ணின் வகிபாகம் என்ன என்பதை விளக்கினோம். மண் தான் எல்லாமே. மண்ணிலிருந்துதான் மனிதன் உட்பட உயிரினங்கள் எல்லாம் படைக்கப்பட்டது. மண்ணில் நாங்கள் இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வதன் மூலம் அது தன்னுடைய மூலப்பொருட்களை மீளவும் பெற்றுக்கொள்ளும். அமெரிக்காவில் உள்ள மண்ணும் அந்த காலநிலையும் அங்குள்ள மக்களை வெள்ளையாகவும் வைத்திருக்கிறது. எமது பிரதேசங்களில் குறித்து எல்லைகளை போட்டால் அந்த மண்ணின் வித்தியாசம் ஏதாவது ஒன்றில் தெரியும். அது பேச்சுவழக்காக, நிறமாக, உடலமைப்பாக, எதுவாகவும் இருக்கும். ஆகவே இந்த மண்ணை பற்றி நாங்கள் நிறைய பேசலாம். இறைவனின் படைப்பில் மண் தனி சிறப்பியல்வுகளை கொண்டது என்பதை விஞ்ஞான ரீதியாக விளக்கினோம்.

அந்த விடயம் தொடர்பில் அரசுடனும், அதிகாரிகளுடனும் பல்வேறு கலந்துரையாடல்கள், சந்திப்புக்கள், தெளிவூட்டல்களை கடந்து நல்லடக்கம் செய்யும் கட்டத்தை எட்டினோம். இப்போது நாட்டில் கொரோனா இருப்பது போன்றே இல்லை. மூக்கை சித்திரவதை செய்தார்கள். அதில் பட்ட அவஸ்தைகள் வேறு. அது எப்படியோ நாங்கள் அனுபவிக்கவேண்டியவை கடந்து சென்றுவிட்டது.

இலங்கை அரசியலில் சர்வதேச அஜந்தாக்கள் பற்றி:-
இலங்கையின் சிரேஷ்ட அரசியல் தலைவர் என்ற அடிப்படையில் மக்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த நாட்டின் வளங்களையும், சொத்துக்களையும் அனுபவிக்க இந்த நாட்டை ஆங்கிலேயர் உட்பட பல சக்திகளும் கையகப்படுத்திக்கொண்டதை போன்று இப்போது சிறுபான்மையினரை மூட்டிவிட்டு கறிவேப்பிலையாக பயன்படுத்தி சமநிலையை கெடுத்து பிரச்சினைகளை உண்டாக்கி இலங்கையை வேறு ஒரு வலையில் சிக்கவைத்து நாட்டை குற்றவாளியாக்கி இந்த நாட்டின் வளங்களை கையப்படுத்துவது இந்தியாவா சீனாவா அமெரிக்கவா நோர்வேயா என்ற போட்டியில் இலங்கையை கொண்டுவந்து அதனில் சஹ்ரானையும் இணைத்து நாம் வரலாற்று துயரை அனுபவித்தோம். சஹ்ரானுக்கு மார்க்கம் தெரியாது.அவர் பாவிக்கப்பட்டார். அவருக்கே தெரியாமல் அவரை கொலை செய்தனர். இப்படி முஸ்லிங்களை இலக்குவைத்து உலகம் முழுவதிலும் முஸ்லிங்கள் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தவைத்ததார்கள்.

அதை வைத்து கடந்த அரசாங்கம் பெரும் அரசியல் செய்தது. நாங்கள் தான் கட்டுப்படுத்தினோம் என்றார்கள். ரணில் விக்ரமசிங்க பொலிசுக்கு உரிய பொறுப்பாளராக இருந்தார். இப்போது என்னென்னவெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் வெளியில் வரட்டும். அம்பாறையில் கொத்துரொட்டிக்குள் மலட்டு மருந்து விநியோகிப்பதாக சொன்னார்கள் அந்த பிரச்சினையை திகனைக்கும் கொண்டு சென்று தாக்கினார்கள். பல அழிவுகளை உண்டாக்க அந்த பொய்யை பாவித்தார்கள். ஆனால் அப்போதைய ஜனாதிபதி மைத்திரியிடம் நான் சொன்னேன் இப்படியான ஒரு மருந்து இருந்து அதை முஸ்லிம் ஒருவன் போட்டால் அவனின் கழுத்தை நடுவீ தியில் வைத்து வெட்ட வேண்டும். அப்படி இல்லை என்றால் அப்படி ஒரு மருந்து இல்லை என்பதை பிரகடனம் செய்ய வேண்டும்.

முஸ்லிங்கள் மீது இருக்கும் கரைகள் தொடர்பில்:- 
முஸ்லிங்கள் பயங்கரவாதிகள் அல்ல. பதவிகளை யாரோ பெற்றுக்கொள்ளவும், இலங்கையை சின்னா பின்னமாக்கவும் அந்த கோரசம்பவம் நடைபெற்றது. பதவிகளை பெற்றுக்கொள்ள யாரும் குண்டடிக்க முடியும் என்று யாரும் நம்பினால் அது முஸ்லிங்களுக்கு தொடர்பில்லாத ஒன்று என்று நம்ப வேண்டும். யார் எந்த ஆணைக்குழுவை நிறுவினாலும் யார் அதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்காதவரை நாங்கள் தூங்க முடியாது. முஸ்லிங்கள் நிரபராதிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும். முஸ்லிங்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்த முனைந்தவர்கள். இந்த நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த அப்போதிருந்தே மிகவும் பொறுப்புடன் செயற்பட்ட சமூகம். அந்த சமூகத்தை பயங்கரவாதிகள் எனும் இழி சொல்லில் இருந்து விடுவிவிக்க வேண்டும் . அது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இவற்றையெல்லாம் யார் செய்கிறார்கள் என்பதை அறிய சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபடுகின்ற போதுதான் இந்த நாட்டைப்பற்றி நாங்கள் பேச முடியும். இந்த நாட்டின் பிரஜைகள் நாங்கள். இலங்கையர்களான நாங்கள் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள். நமக்குள் ஒன்றுகூடி இந்த நாட்டில் வாழும் மக்களின் வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான யாப்பு எங்களுக்கு தேவை.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் தேசிய காங்கிரஸின் நிலைப்பாடு:-
இப்போது எங்களின் தேவை மாகாண சபை தேர்தலல்ல. அதன் அதிகாரங்கள் என்ன என்பது எங்களுக்கு தெரியும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இலங்கையை தனது கைபொம்மையாக்க எடுத்த தீர்மானங்களே அவை. அந்த ஒப்பந்தத்தில் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். அதில் இருந்து விடுதலை பெறவே பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் வந்தார். அந்த இடத்தில் தான் தேசிய காங்கிரஸ் இப்போது இருக்கிறது. இதுதொடர்பில் கூட்டப்படும் சகல கூட்டங்களிலும் மிகத்தெளிவாக ஆணித்தரமான எங்களின் பக்க கருத்துக்களை முன்வைத்துள்ளோம். மாகாண சபை தேர்தல் எப்போதும் வைக்க முடியும் கடந்த அரசாங்கத்தில் இந்த சட்டமெல்லாம் வந்தபோது ஹரீஸ், றிசாத் உட்பட இப்போது கூவிக்கொண்டிருக்கும் எல்லோரும் கைகளை உயர்த்தினார்கள். அதன் பின்னர் பொதுவெளியில் மேசையை உடைத்தார்கள். இதற்க்கு மக்கள் எல்லோரும் சாட்சியாக இருக்கிறோம். நாங்கள் மாகாணசபையை பற்றி சிந்திப்பதில்லை. கொரோனா அலையில் ஜனாதிபதி தேர்தலையும் நடத்தி, பொதுத் தேர்தலையும் நடத்தி இருக்கிறோம். உள்ளுராட்சி சபைகள் இருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கிறது என்பதனால் புதிய யாப்பை கொண்டு வாருங்கள் என்பதுதான் எங்களின் வாதம்.

அரசிலுள்ள பங்காளி கட்சிகளின் சந்திப்புக்கள் பற்றி:-
அரசிலுள்ள சிறிய கட்சிகள் வாராந்தம் கூடி ஆட்சி மாற்றம் பற்றியோ அல்லது பதவிகள் பெறுவது பற்றியோ நாங்கள் பேசவில்லை இந்த காலத்தில் நாட்டை முன்னேற்ற அடுத்த நகர்வு எவ்வாறாக இருக்க வேண்டும் என்பது பற்றியும், புதிய யாப்பை எவ்வாறு அமுல்படுத்துவது, வெளிநாட்டு சக்திகளிடமிருந்து நாட்டின் வளங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் நாட்டுப்பற்று மிக்கவர்களாக பேசிக்கொண்டிருக்கிறோம். தேசிய காங்கிரஸ் நாட்டுப்பற்று மிக்க கட்சி. தேசிய அக்கறை கொண்ட கட்சி. இலங்கை சுதந்திரமடைய முன்னர் உருவான கட்சியின் பெயர் கொண்ட கட்சி . முஸ்லிம், தமிழ் என்கின்ற பெயர்களில் இயக்கங்களும் இருக்கக்கூடாது என்று வருகின்ற போது நாங்கள் 20 வருடங்களுக்கு முன்னரே தேசிய காங்கிரஸ் என்று பெயர் வைத்திருக்கிறோம். எங்களின் அரசியல் இவர்களுக்கு விளங்க நிறைய காலம் எடுக்கிறது.

சாய்ந்தமருது நகரசபை விவகாரம் தொடர்பில்:-
சாய்ந்தமருதுக்கு 100 வருடங்கள் உள்ளுராட்சி சபை இருந்தது. ஏதோ ஒரு தேவைக்கு ஏதோ ஒருவகையில் ஒன்றாக்கினாலும் அதை அவர்கள், அவர்களின் உரிமையை திருப்பி கேட்டால் அதை மறுக்க யாருக்கும் அருகதை இல்லை. அவர்கள் புதிதாக கேட்கவில்லை. புதிதாக கேட்டல் பொறுமை காக்க கூறலாம். ஆனால் அவர்கள் கேட்பது அவர்கள் வைத்திருந்த அவர்களின் உரிமையை. அதை வைத்து அரசியல் செய்யும் சின்னத்தனமான அரசியல்வாதிகள் நமது பிரதேசங்களில் இருந்து ஒழிய வேண்டும். தமிழர்களையும் முஸ்லிங்ககளையும் குத்திவிட்டு அரசியல் செய்யும் கயவர்களிடமிருந்து நமது மக்கள் விடுபட வேண்டும். சாய்ந்தமருது, அக்கரைப்பற்று மக்கள் ஒற்றுமைப்பட்டது போன்று எல்லா ஊர்மக்களும் ஒற்றுமைப்பட்டால் கீழ்த்தரமான அரசியல்வாதிகளிடமிருந்து நமது மக்கள் விடுதலை பெற முடியும். நிறையவே சாதிக்க முடியும்.

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவரின் எண்ணங்கள், எமது பிரதேச மூத்தவர்களின் எண்ணங்கள் எதுவோ அதை நிறைவேற்ற தேவையான தைரியத்தை இறைவனிடம் கேட்டு நிற்கிறேன். எண்ணமே வாழ்வு நல்லது நடக்கும். நான் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சராக இருந்தபோது நகரசபையை அறிவிக்க எடுத்த முயற்சியின் போது அப்பிரதேச மக்களின் வாக்குகளை பற்றி நான் கவனம் எடுக்க வில்லை. உண்மைக்காக என்னுடைய எத்தனம் இருந்தது. கல்முனையையும் பாதுகாக்க நான் எண்ணம் கொண்டிருந்தேன். என்னுடைய எதிரணியினர் பிரதேச வாதங்களை தட்டிவிட்டார்கள். அதிலும் நாங்கள் தோற்க வில்லை. சாய்ந்தமருது பிள்ளையை திருமணம் செய்திருக்கும் கொழும்பில் வசிக்கும் ஐக்கிய தேசிய கட்சிகாரர் ஒருவர் சஹ்ரானின் ஊருக்கு சபைகொடுத்ததாக நெருப்பை மூட்டிவிட்டு அது கொழுந்துவிட்டு எரிந்தது. அது மாத்திரமின்றி முஸ்லிம் காங்கிரஸ்காரர்களின் சதியினால் தான் அது தற்காலியமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் அதன் சபைக்காலம் 2022 தான் இன்சா அல்லாஹ் சாய்ந்தமருது மக்களின் தாகத்திற்கு தீர்வு கிடைக்கும் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நான் அன்று யாரையும் கவனத்தில் எடுக்காது பிரித்திருந்தால் காலம் என்னை அநியாயக்காரனாக காட்டியிருக்கும். இப்போது நியாயம் வெளித்திருக்கிறது. சாய்ந்தமருது மக்கள் எனக்கு வழமையாக வாக்களிப்பதில்லை அப்போதும் நான் அவர்களுக்கு நன்மைசெய்யவே எண்ணியுள்ளேன். ஆனால் இப்போது அந்த மக்கள் எனக்கு கணிசமாக வாக்களித்திருக்கிறார்கள் நான் அவர்களுக்கு உரித்தான எம்.பி அவர்களின் தேவைகளை அவர்களின் உதவியுடனையே செய்து கொடுப்பேன். அதற்கான பலத்தை இறைவன் எனக்கு தருவான்.

20க்கு கையுயர்த்திய எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள் தொடர்பில்:-
ஒரு பொதுக்கூட்டத்தில் வைத்து இவர்களின் அரசியல் முகத்திரையை கிழிக்க எண்ணியுள்ளேன். ஜனாஸா விவகாரம் முதல் சகலத்திலும் இவர்கள் செய்த திருகுதாளங்களை வெளியே கொண்டுவருவேன். இவர்களை பாராளுமன்றத்தில் பார்த்து மிகவும் கவலையாக இருந்தது. எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்துவிட்டு அவர்கள் மனசாட்சி படி வாக்களித்துள்ளார்கள் என்கிறார் தலைவர் மக்களும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். இவர்கள் சிறப்பாக வாழ நான் வாழ்த்துவேன். ஏனெனில் மக்களை நன்றாக ஏமாற்றி வாக்கெடுக்கிறார்கள். ஆனால் மக்களுக்கு தான் நாம் ஏசவேண்டுமே தவிர அவர்களுக்கில்லை. சமூகத்திற்கு நிறையவே அறிவிருக்கிறது, ஒவ்வொரு வீட்டிலும் படித்தவர்கள் இருக்கிறார்கள், பல்துறை ஜாம்பவான்கள் இருக்கும் சமூகம் முஸ்லிம் சமூகம். இப்படியானவர்கள் கண்டியிலிருந்தும், வன்னியிலிருந்து கிழக்குக்கு வந்து ஒருகையாட்டி விட்டு கிழக்கு மக்களை ஏமாற்றிவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதில் கெட்டிக்காரன் யார் என்பதை மக்கள் தாங்களே தாங்கள் சுய கேள்விகேட்க வேண்டும். கிழக்கு முஸ்லிங்கள் என்பது நாட்டில் வாழும் முஸ்லிங்களுக்கு அடையாளம். இங்கிருந்துதான் முஸ்லிங்களுக்கான முரல் ஒலிக்கவேண்டும் என்றால் நாம் எல்லோரும் ஓரணியில் ஒன்றாகவேண்டும். தேசிய காங்கிரஸ் அரசியல் காய்நகர்த்தலை செய்வதை விடவும் நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கிறது. அதனால் தான் நாட்டுப்பற்றுமிக்கவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்.

சமீபத்தையை நாட்களில் இலங்கை நிர்வாக சேவையில் முஸ்லிங்களின் வகிபாகம் பற்றி:-
இந்த நாட்டிலுள்ள எத்தனையோ அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். எத்தனையோ செயலாளர்களுடன் நாங்கள் நட்பு பாராட்டியுள்ளோம். அப்போதெல்லாம் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளின் பெறுமதி எங்களுக்கு புரியும். பல முக்கிய பதவிகளை வகிக்கும் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளின் பெறுமதியை நாங்கள் அறிந்திருக்கிறோம். இப்போது இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளின் எண்ணிக்கை முஸ்லிம் சமூகத்தில் குறைவாக இருக்கிறது. நாங்கள் அப்படியானவர்களை வளர்த்து புடம்போட வேண்டிய தேவை இருக்கிறது.

அதே போன்றுதான் நேர்மையான, நியாயமான, நல்ல எண்ணங்களை கொண்ட வைத்தியர்களும் வைத்தியசாலைகளுக்கு தேவை எனும் நிலையை கொரோனாவின் பின்னர் அறிந்துள்ளோம். இப்போது இருக்கும் சுகாதார நிலையை கொரோனாவுக்கு முன்னர். கொரோனாவுக்கு பின்னர் என்று பிரிக்கலாம். இலங்கையில் இலவச மருத்துவம், இலவச கல்வி, இலவச மதியபோசனம், இலவச பாடப்புத்தகம் என்றெல்லாம் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது.

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி நியமனங்கள் தொடர்பில்:- 
அதே போன்றுதான் இன்றைய ஜனாதிபதி கோத்தாபய சாதாரணதர தகுதி, உயர்தர தகுதி, மேலும் பல தகுதிகள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற சூழ்நிலையில் நாட்டை செதுக்கும் திறமை கொண்ட ஆனால் சாதாரணதர தகுதி பெற முடியாமல் போனவர்களை திறன் அபிவிருத்தி செயலணியை உருவாக்கி அதில் இணைத்துள்ளார்.

தினம் 5000 க்கு மேல் உழைக்கும் திறன் கொண்டவர்கள் வீட்டில் தொழில் இல்லாமல் இருப்பதை உணர்ந்தே ஜனாதிபதி இந்த திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த செயலணியில் இருப்பவர்களை பார்க்கும் போது எல்லோரும் திடகாத்திரமானவர்கள். பலவீனமானவர்கள் இல்லை. எல்லோரும் திறமையானவர்கள். அண்மையில் என்னுடைய வீட்டில் தனிப்பட்ட மர வேலைக்காக அழைத்திருந்த ஒரு சகோதரர் செய்த கலை நுட்பங்களுடன் கூடிய வேலைகளை பார்க்கின்ற போது எமது நாட்டின் பிரபலமிக்க தனியார் தளபாட உற்பத்தி நிறுவனங்களை சவாலுக்கு உற்படுத்தும் திறமையை கொண்டிருந்தார். அப்படியானவர்களை புடம்போடுவது நாட்டின் பொருளாதாரத்தை புடம்போடுவது போன்றதே. எமக்கு தேவையானவற்றை எங்கிருந்தெல்லாம் வாங்குகிறோம். எம்மிடம் நிறைய திறமையான கைவினை கவிஞர்கள் இருக்கிறார்கள், சகல வழிகளிலும் போதிய வளமும், மூலப்பொருட்களும் இருக்கிறது. அவற்றையெல்லாம் பயன்படுத்தி நாம் ஏற்றுமதியாளர்களாக மாற வேண்டும்.

சில மாதங்களில் பழுதாகும் தன்மை கொண்ட வெளிநாட்டு பொருட்களை வாங்கும் நாம் நீண்டு உழைக்கும் தன்மை பொருட்களை இலங்கையில் உருவாக்க முன்வர வேண்டும். அதற்கான சகல வளமும் நம்மிடம் இருக்கிறது. நல்ல நீர், நல்ல வயல் வளம், போன்றவற்றை வைத்துக்கொண்டு நஞ்சு தனமான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். நாம் பிள்ளைகளுக்கு கொடுக்கும் பாலில் சக்தி இல்லை, நாம் சாப்பிடும் நெல்லில் கடைசி வரை கிருமி நாசினி தெளித்து நஞ்சியாக்கி வைத்துள்ளோம். சிதையுண்டு போகிருக்கும் இந்த நிலையை அரச முக்கிய அதிகாரிகள், உள்ளுராட்சி தலைவர்களின் ஒத்துழைப்புடன் நிறைய பணியாற்ற வேண்டியுள்ளது. - என்றார்

No comments: