News Just In

4/01/2021 05:19:00 AM

மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் இவ்வாண்டிற்கான முதலாவது விசேட ஒன்று கூடல்!!


(கல்லடி நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட ஹரிதாஸ் எகட் நிறுவனத்தின் அனுசரனையுடன் இயங்கிவரும் பல் சமய ஒன்றியத்தின் இவ்வாண்டிற்கான முதலாவது ஒன்று கூடல் நேற்று முன்தினம் 30.03.2021 ஆந் திகதி புதன்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட ஹரிதாஸ் எகட் நிறுவனத்தின் தலைவர் அருட்பணி அ.இயேசுதாசன் தலைமையில் மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.

பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ.கே.சிவபாலன் குருக்கள் அவர்களது வரவேற்புரையுடன் ஆரம்பமான குறித்த ஒன்று கூடலில் பல்சமய ஒன்றியத்தின் உப தலைவர்களான ஜனாப் இக்பால், ஜோன் யோசப் மேரி அடிகளார், பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை ரொகான் ராஜன் உட்பட அருட்தந்தையர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அடங்களாக பல்சமய ஒன்றியத்தின் ஆரையம்பதி, காத்தான்குடி - கல்லடி, மண்முனை வடக்கு, ஏறாவூர் - செங்கலடி, ஓட்டமாவடி - வாழைச்சேனை ஆகிய கிளைகளின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது இவ்வாண்டிற்கான நிருவாகக் குழு தெரிவு செய்யப்பட்டதுடன், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள், எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக ஒற்றுமைச் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த நிகழ்வினை தலைமை தாங்கி நடாத்திய மாவட்ட ஹரிதாஸ் எகட் நிறுவனத்தின் தலைவர் அருட்பணி அ.இயேசுதாசன் அடிகளார் தனது தலைமையுரையின் போது பின்வருமாறு தனது கருத்துக்களை
தெரிவித்திருந்தார்.

மதங்களுக்கிடையில் இன நல்லுறவு மேற்கொள்ளப்பட வேண்டும், அவை நிகழ்ந்தாலே போதும்
ஏனைய அனைத்து தேவைப்பாடுகளும் தானாகவே இடம்பெறும், இவற்றிற்கு எல்லாம் மேலாக எமது மாவட்டத்தில் அமைதி சமாதானம் நிலவ நாம் அனைவரும் முன்வர வேண்டும்.

எமது அமைப்பானது நிகழ்வுகள், விழாக்கள் ஊடாக எமது மாவட்டத்தில் இன ஒற்றுமையினை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டு வருகின்றது,
இவ்வாறாக எமது அமைப்பின் ஊடாக எமது மாவட்டத்தை சமூக நல்லிணக்கமுள்ள மாவட்டமாக மாற்றியமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பை அனைவரிடமும் இருந்து எதிர்பார்ப்பதாக தனது உரையினை நிறைவு செய்திருந்தார்.





No comments: