News Just In

4/20/2021 01:06:00 PM

மட்டக்களப்பு- பறங்கியாமடுவில் 43 வீடுகள் அரசாங்க அதிபரினால் திறந்துவைப்பு!!


சிறுசிறு உதவிகளைச் செய்துவிட்டு பெரிய விளம்பரம் தேடும் இவ்வுலகில் பாரிய உதவியை செய்துள்ள புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பினரைப் பாராட்டுகிறேன். சிலு சிலுப்பில்லாத பலகாரமாகவே இந்தசேவையைப் பார்க்கின்றேனென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் கிரான் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய பறங்கியாமடுவில் 43 வீடுகளைத் திறந்துவைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பினர் மலேசியா தமிழர்பேரவை மற்றும் சர்வதேச மருத்துவ சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையோடு பறங்கியாமடுவில் மணல் குடிசைகளில் அடிப்படைவசதிகளற்று வாழ்ந்துவந்த 43 குடும்பங்களுக்கு வீடுகளையும் மலசல கூட மின்னிணைப்பு வாழ்வாதார வசதிகளையும் செய்துகொடுத்துள்ளனர்.

அந்த வீடுகளின் திறப்பு விழா புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் எந்திரி ஹென்றிஅமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பின் சர்வதேசத் தலைவர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், கிரான் பிரதேச செயலாளர் ரி.ராஜ்பாபு, உதவிக் கல்விப் பணிப்பாளர், வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

அங்கு அரசாங்க அதிபர் கருணாகரன் மேலும் உரையாற்றுகையில்,
மனிதனின் அடிப்படைத்தேவைகளான உணவு உடை உறையுள் ஆகிய மூன்றுமில்லாமல் இன்னும் அநேகமான மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். இந்த அடிப்படை வசதிகளற்று இன்றும் பல பிரதேசங்கள் எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றன.

இந்நிலையில் இந்தப் பறங்கியாமடுப் பிரதேசம் காலாகாலமாக மணல் குடிசையோடு கடலை நம்பி அடிப்படை வசதிகளற்று வாழ்ந்துவந்தவர்கள்.
அதனை இனங்கண்டு இவ்வமைப்பினர் இன்று எவ்வித விளம்பரமுமில்லாமல் செய்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படைச்சேவைக்காக மாவட்டத்தலைவர் என்ற வகையில் மனதாரப்பாராட்டுகிறேன்.

இதற்கு கைமாறாக இக்கிராம மக்கள் செய்யவேண்டியது என்ன? நீங்கள் முதலில் உங்கள் காணியைச்சுற்றி வேலி அமைத்து வாழை நடுங்கள், பூக்கன்றுகள் நடுங்கள், அப்போது உங்கள் கிராமம் சிரிக்கும். உங்கள் வாழ்க்கைப்பாங்கு அடுத்தகட்டத்திற்கு நகரும்.

பறங்கியாமடுக் கிராமத்திற்கு இச்சேவை பாரிய திருப்புமுனையாக அமையும், மக்களின் வாழ்வியல் ஒழுங்கு மாறும், இதற்காக தங்களை முழுமையாக உண்மையாக அர்ப்பணித்த சர்வேஸ்வரன் ஹென்றி அமல்ராஜ் உள்ளிட்ட குழாத்தினரை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன் என்றார்.

விழாவில் பயனாளிகளின் வீடுகள் நாடாவெட்டித் திறந்துவைக்கப்பட்டன. அதற்கான திறப்புகள் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன. பொதுமக்கள் இவ் அமைப்பின் சேவைக்காக பிரதிதிகளுக்கு பொன்னாடைபோர்த்துக் கௌரவித்தனர்.

மிகவிரைவில் இவர்களுக்கான கடற்கலங்கள் அதற்கான சகல வசதிகளோடும் வழங்கிவைக்கப்படவுள்ளன. மேலும் 06 பயனாளிகளுக்கு வீடுகள் அமைக்கவும் பாடசாலை மாணவர்கள் நீண்டதூரம் சென்று கல்வியைத்தொடர துவிச்சக்கரவண்டிகளை வழங்கவும் இணக்கம்காணப்பட்டது.






No comments: