News Just In

4/26/2021 06:31:00 PM

மகனின் பிறந்த தின கொண்டாட்டத்தில் போதைப் பொருளுடன் விருந்து கொடுத்த ஆசிரியை- 15 பேர் கைது!!


தனது மகனுடைய பிறந்தநாளுக்கு போதைப்பொருள் பாவனையுடன் களியாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்த சர்வதேச பாடசாலையொன்றில் கற்பிக்கும் ஆசிரியை உள்ளிட்ட 15 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு - பாமன்கடையிலுள்ள இரு மாடி சொகுசு வீடொன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபரான ஆசிரியையின் இரு மகன்மாரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். இளைஞர் யுவதிகளுடன் ஐஸ் போதைப்பொருள் 15 கிராம் , 2,50 மில்லி கிராம் கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் பாவிப்பதற்கு பயன்படுத்தப்படும் உபகரணம் என்பனவும் மீட்க்கப்பட்டுள்ளன.

இளைஞர் யுவதிகள் சிலர் சொகுசு வீடொன்றில் போதைப் பொருள் பாவிப்பதாக வெள்ளவத்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமையவே குறித்த சந்தேகநபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கைது செய்யப்பட்ட போது குறித்த வீட்டின் மேல் மாடியில் சிலர் பாடலுடன் நடனமாடிக் கொண்டிருந்ததாகவும் , ஏனையோர் போதைப் பொருளை பாவித்துக் கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது சந்தேகநபரான ஆசிரியை இரு தரப்பினருக்கு ஆதரவளிக்கும் வகையில் அவர்களின் செயற்பாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

42 வயதுடைய குறித்த ஆசிரியையும் 18 - 23 வயதுக்கு இடைப்பட்ட ஏனைய இளைஞர் யுவதிகளும் கைது செய்யப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அவர்களிடமிருந்து ஐஸ் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் யுவதிகள் தெஹிவலை , வெள்ளவத்தை மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் உள்ள சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்பவர்கள் என்பது பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

No comments: