News Just In

3/31/2021 06:12:00 PM

தேசிய மரநடுகை தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற கரையோர கண்டல் தாவர மர நடுகை நிகழ்வு!!


(கல்லடி நிருபர்)
தேசிய மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் தேசிய வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதியின் "நாட்டை கட்டியெழுப்பு சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை திட்டத்தின் ஊடாக சுற்றாடல் முகாமைத்துவத்தை பாதுகாத்தல், வனச்செய்கையினை மேம்படுத்துதல், காட்டு வளத்தை பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் மரங்களை நாட்டி வளங்களை பாதுகாத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் மரக்கன்றுகள் நாட்டும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அதற்கு இணையாக மட்டக்களப்பு ஊறணி வாவிக்கரை பகுதிகளில் கண்டல் தாவரம் நாட்டும் நிகழ்வானது சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் கிழக்கு மாகாணத்திற்கான தலைவர் கே.முத்துலிங்கம் தலைமையில் இன்று 31.03.2021 ஆந் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தன் கலந்துகொண்டு கண்டல் தாவரத்தினை நாட்டி நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார்.

குறித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக அருட்பணி ஜோன் யோசப்மேரி அடிகளார், மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் அருணாசலம் சுதர்சன், கரையோர பேனல் திணைக்கள மாவட்ட இணைப்பாளர் அ.கோகுலதீபன், கிழக்கு மாகாண இணைப்பாளர் க.பகீரதன், இந்திரன் ஜெயசீலி, வன வள திணைக்கள அதிகாரிகள், மீனவ அமைப்பின் பிரதிநிதிகள், கிராம அபிவிருத்தி சங்கம், மகளிர் கிராம அபிவிருத்தி சங்கம், விடுமுறைக்கால தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள், மட்டக்களப்பு சமூக பாதுகாப்பு பொலிஸ் குழு உத்தியோகத்தர்கள், குறித்த பகுதிக்கான கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலர் கலந்துகொண்டனர்.

















No comments: