News Just In

3/18/2021 01:12:00 PM

அபிவிருத்தியை மேற்கொள்கின்ற அதேவேளை அதற்குச் சமாந்திரமாக போதைப் பொருள் விநியோகம் பாவனை என்பனவற்றையும் மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்க வேண்டும்!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அபிவிருத்தியை மேற்கொள்கின்ற அதேவேளை அதற்குச் சமாந்திரமாக போதைப் பொருள் விநியோகம் பாவனை என்பனவற்றையும் மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அரசாங்கத்தின் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் இவ்வாண்டிற்கான முதலாவது பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை 18.03.2021 இடம்பெற்றது.

நிகழ்வில் அதிகாரிகள் திணைக்கள கூட்டுத்தாபனங்களின் அலுவலர்கள் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

அங்கு தொடரந்து உரையாற்றிய அவர்

ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்த விஷே‪ட கலந்துரையாடலுக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.

அதிலே நானும் ஹரீஸ் எம்பியும் கிழக்கு மாகாணத்திலே போதைப் பொருள் பாவனை ஒழிக்கப்படுவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தோம்.

போதைப் பொருள் விடயத்திலே சிலாகித்தப் பேசப்பட வேண்டிய இரண்டு விடயங்களை இந்த அரசாங்கம் முக்கியமான சாதித்துக் காட்டியுள்ளது.

இது ஜனாதிபதி சொன்ன விடயம்தான். ஒன்று நாட்டில் இயங்கி வந்த பிரதான போதைப் பொருள் விநியோக வலைப்பின்னலை சிதறடித்தமை. இரண்டாவது பாதாள உலகக் குழுக்களை முற்றாக அழித்தொழித்தமை. நாட்டிற்கே பெரும் கேடாக அமைந்த இந்த இரண்டு விடயங்களும் மிகக் குறுகிய காலத்திற்குள் தகர்த்தெறியப்பட்டமை பெரும் நிம்மதி தரக் கூடிய விடயங்களாகும்.

இந்த விடயத்திலே ஜனாதிபதிக்கும் அவர் தலைமையிலான அரசுக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

அதேவேளை போதைப் பொருள் சம்பந்தமான எங்களது கரிசனைக்கு ஜனாதிபதி பதில் அளிக்கும்போது கிராமிய மட்டங்களில் போதைப் பொருள் விநியோகம் பாவனை என்பனவற்றை ஒழிப்பதாக இருந்தால் மக்களின் பங்களிப்பு பூரணமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எனவே ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்று சிறிய மட்டத்தில் காணப்படும் போதைப் பொருள் விநியோக வலைப்பின்னலை சிதறடிக்க வேண்டும்.

இந்தப் பாரிய சமூகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சகல தரப்பாரும் இயங்க வேண்டும்.

பொலிஸ் பிரிவினரால் மட்டும் போதைப் பொருள் விநியோகத்தை பாவனையை ஒழித்து விட முடியாது.

சொந்த சமூகத்திற்குள்ளே நடமாடும் பொதைப் பொருள் விநியோகஸ்தர்களை அடையாளம் கண்டு அது பற்றிய தகவல்களை பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்க வேண்டும்.

இது விடயமாக பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் என்கின்ற வகையில் மட்டக்களப்ப மாவட்டத்தின் 4 முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அவ்வப் பிரதேச செயலாளரையும் நகர சபைகள் பிரதேச சபைகள் ஆகியவற்றின் தலைவர்களையும் பொலிஸ் அதிகாரிகள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரையும் உள்வாங்கிக் கொண்டதாக குழுவை அமைத்து இயங்குமாறு நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.

எனவே இந்தக் குழு காத்திரமாக இயங்கினால் போதைப் பொருள் எனும் கொடிய சமூக விரோதசை; செயலை நமது பிரதேசங்களிலிருந்து முற்றாகவே அகற்றி விட முடியும்” என்றார்.







No comments: