News Just In

3/18/2021 07:30:00 PM

சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம்- நிபந்தனையுடன் தற்காலியமாக நிறுத்தப்பட்டது இளைஞர்களின் போராட்டம்!!


(நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்)
சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அண்மையில் வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை வெற்றியளிக்காமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை அங்கையே நிரந்தரமாக வைக்குமாறு கோரி சம்மாந்துறை இளைஞர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) அந்த சாலைக்கு முன்னால் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த இ.போ.சபையின் கிழக்கு பிராந்திய செயலாற்று முகாமையாளர் எம்.ஏ உவைஸ், உட்பட அரச உயர் அதிகாரிகள் சம்மாந்துறை பஸ் டிப்போவை கல்முனை பஸ் டிப்போ நிலையத்துடன் இணைக்கவில்லை எனவும் நிர்வாக ரீதியான நடவடிக்கை மாத்திரம் நடைபெறுவதாகவும் விளக்கமளித்தனர். ஆனால் அவ்வாறு இடம்பெறாததால் இன்று (18) சம்மாந்துறை பஸ் டிப்போக்கு முன் மீண்டும் இளைஞர்கள் கூடி இரண்டாவது நாளாகவும் ஆட்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர் சபை தலைவர் மௌலவி யூ.எல்.மஹ்ரூப், அரசியல் மேல்மட்டத்தில் தமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை ஆர்ப்பாட்டக்காரர்களிடம் விளக்கி எதிர்வரும் செவ்வாய்கிழமையளவில் முடிவை தருவதாக அறிவித்தார். இது தொடர்பில் நம்பிக்கை கொண்டு ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றதுடன் செவ்வாய் கிழமை வரையும் ஒரு செயற்பாடுகளும் நடைபெறாத பட்சத்தில் மீண்டும் புதன் கிழமை தொடக்கம் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை வீதிக்கு களம் இறங்கபோவதாக ஆட்பாட்டகாரர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வினவ இ.போ.சபை கிழக்கு பிராந்திய செயலாற்று முகாமையாளர் எம்.ஏ. உவைஸ் அவர்களின் அலுவலகத்திற்கு சென்று ஊடகவியலாளர்கள் வினவியபோது துரித கெதியில் இந்த சாலைக்காக ஒதுக்கப்பட்டுள்ள வங்களாவடி பிரதேச காணியில் நிரந்தர தீர்வை வழங்கும் நோக்கில் இந்த டிப்போவை அமைக்கவுள்ளதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையம் அமைத்தல், நிலத்தை சீரமைத்தல், சுற்றுவேலி அமைத்தல் போன்ற பணிகளை செய்து உடனடியாக இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் விரைவில் இந்த வேலைகளை பூர்த்திசெய்து இ.போ.சபை உயர் அதிகாரிகளை கொண்டு உத்தியோகபூர்வமாக திறக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.




No comments: