News Just In

3/20/2021 07:40:00 PM

பசறையில் 14 பேரை பலியெடுத்த பேரூந்து விபத்து தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்!!


பசறை - 13ஆம் கட்டை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சாரதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் வழமையான சாரதி பேருந்தை செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

பேருந்தை செலுத்த வேண்டிய சாரதிக்கு பதிலாக மற்றுமொருவர் பேருந்தை செலுத்தியுள்ளார்.

லுணுகலையை சேர்ந்த 53 வயதான பேருந்தின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் விபத்துடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் பெறப்பட்டுள்ளன.

மோட்டார் வாகன பரிசோதர்களை பயன்படுத்தி விபத்திற்குள்ளான பேருந்தின் தொழில்நுட்பம் தொடர்பில் பரிசோதிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


இந்த விபத்தில் மரணித்தவர்களில், ஒருவரின் சடலத்தை அடையாளம் காண முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா பரிசோதனைகளுக்காக சரீரங்களில் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன் அவற்றின் முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

அத்துடன் மரண பரிசோதனைகளுக்காக பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சரீரங்கள் பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்தநிலையில் மரணித்தவர்களில் தம்பதியினரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, 13ஆம் கட்டைப் பகுதியில் சுமார் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று காலை விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில், 14 பேர் உயிரிழந்தனர்.

அவர்களுள், 9 ஆண்களும், 5 பெண்களும் அடங்குகின்றனர்.

அத்துடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, மோட்டார் வாகன பரிசோதர்களை பயன்படுத்தி விபத்திற்குள்ளான பேருந்தின் தொழில்நுட்பம் தொடர்பில் பரிசோதிக்க எதிர்பார்த்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

விபத்தில் பேருந்து முழுமையாக சேதமடைந்துள்ளமையினால் இது தொடர்பான பரிசோதனைகளில் தாமதம் ஏற்படும் எனவும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் மது போதையில் மற்றும் முறையற்ற விதத்தில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் இன்று முதல் ஒரு மாதத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments: