News Just In

12/01/2020 12:36:00 PM

தமிழர்கள் மீதான அடக்குமுறையை சர்வதேசம் எவ்வளவு காலம் வேடிக்கை பார்க்கப்போகின்றது; ரவிகரன்...!!


இலங்கையில் இடம்பெறும் தமிழர்கள் மீதான அடக்குமுறைச் செயற்பாடுகள், சர்வதேசம் எவ்வளவு காலம் வேடிக்கை பார்க்கப்போகின்றது என முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து மக்களின் கார்த்திகைத் தீபத் திருநாளில் அவர்களை தீபமேற்ற விடாமல் பாதுகாப்பத் தரப்பினர் இடையூறு விளைவித்த சம்பவங்கள் பல வடக்கில் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். துரைராசா ரவிகரன் மேலும் கூறியுள்ளதாவது, “கார்த்திகைத் தீபமானது தமிழ் மக்களால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு நிகழ்வாகும்.

மேலும், இந்த கார்த்திகைத் தீபத்திற்கென ஒரு நீண்ட வரலாற்றுக் கதையே எமது சமயத்தில் உள்ளது. ஆனால், படைகள் ஊடாக தமிழர்களை தமது அடக்குமுறைகளின்கீழ் கொண்டுவரவேண்டும் என்ற நோக்குடன், இவ்வாறான சைவசமயத்தின் வரலாற்றுத் தொன்மை மிக்க கார்த்திகைத் திருநாளை முன்னெடுக்கவிடாது தடுத்துள்ளனர்.

குறிப்பாக கார்த்திகைத் தீபம் ஏற்றியவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், தீபமேற்றுவதற்கு தயாராக இருந்த நிலையில் தீபங்களையும், பொருட்களையும் சிதைத்த நடவடிக்கைகள் எமது மனங்களில் பாரிய வேதனையினை ஏற்படுத்தியது.

இலங்கை பாதுகாப்புத் தரப்பினரின் தொடர்ச்சியான இத்தகைய நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டேயிருக்கின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: