News Just In

11/05/2020 06:56:00 AM

வைத்தியசாலைக்கு நோயாளர்களை கொண்டு செல்வது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!!


சுகவீனமுற்ற எந்தவொரு நபரையும் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதை தாமதப்படுத்த வேண்டாமென பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமக்குத் தெரியும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களில் வசிப்பவர்கள் நோய்வாய்ப்படும் போது 1990 எனும் துரித சேவையை பயன்படுத்தி எந்தவொரு நோயாளரையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் எந்தவிதமான தடையும் இல்லை.

ஆனால் அவ்வாறு நோயாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லாத சம்பவங்கள் இடம்பெறுமானால் முதலில் அவற்றை நாம் தவிர்க்க வேண்டும்.

எந்தவொரு சந்தர்ப்பத்தின் போதும் நோயாளிகளை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கு தடை இல்லை. அவ்வாறு நோயாளிகளை ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் மீள அனுப்புவார்களானால் அது குறித்து முறைப்பாடு செய்யலாம்.

அது தொடர்பாக சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பிரதானிகள் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் சுகாதார அமைச்சை தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக்கொள்ள முடியும். உயிராபத்து ஏற்படும் நிலை ஏற்படுமாயின் எவ்வாறானதொரு வழியிலாவது அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வைத்தியர்கள் என்றவகையில் நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்.

அதனால் எந்தவொரு நபரும், முதியவர்களும் சுகவீனமுற்றால் வைத்தியாசாலையில் அனுமதிப்பதற்கு தாமதிக்க வேண்டாம். அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது. யாராவது அவ்வாறு செயற்படாவிட்டால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: