News Just In

11/07/2026 01:39:00 PM

கொழும்பு நகர வடிகால் அமைப்பின் கொள்ளளவைவிட 4 மடங்கான நீர்: கொழும்பு மேயரின் விளக்கம்

கொழும்பு நகர வடிகால் அமைப்பின் கொள்ளளவைவிட 4 மடங்கான நீர்: கொழும்பு மேயரின் விளக்கம்



சில மணிநேரம் பொலியும் மழையில் கொழும்பு நகரமும் அதைச் சார்ந்த புறநகர்ப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதற்கான காரணங்களை இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் கொழும்பு மேயர் விராய் கெல்லி பல்தசார் விளக்கியுள்ளார்.

கொழும்பு நகரிலுள்ள வடிகால் அமைப்பு சுமார் 30 மில்லிமீற்றர் வரையிலான சாதாரண மழைவீழ்ச்சியைத் தாங்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெள்ளிக்கிழமை பிற்பகலில் சில மணிநேரங்களுக்குள் 129 மில்லிமீற்றர் அளவிலான கனமழை பொழிந்ததால், நகர வடிகால் அமைப்பின் கொள்ளளவு சுமார் நான்கு மடங்கால் அதிகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய மழையின்போதும் கொழும்பு நகரமும் அதன் புறநகர்ப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் பிரச்சினைக்கு விரைவான மற்றும் உடனடித் தீர்வுகளைக் கண்டறிவதற்காக, அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கேற்புடன் விசேட அவசரக் கலந்துரையாடலொன்றிலேயே மேயர் இதனை குறிப்பிட்டார்.குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

நகர பொறியியல் பிரிவுகள், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் இக்கலந்தரையாடலில் கலந்து கொண்டனர்.

நேற்று பிற்பகல் கொழும்பு நகரில் பெய்த இந்த அசாதாரணக் கனமழை காரணமாக நகரின் இயல்பு வாழ்க்கையும் போக்குவரத்து அமைப்பும் முற்றிலும் ஸ்தம்பித்தன. கொள்ளுப்பிட்டி காலி வீதி, பம்பலப்பிட்டி, பொரளை, மருதானை, ஆமர் வீதி, தும்முல்லை மற்றும் நகர மண்டபத்தைச் சுற்றியுள்ள பிரதான வீதிகள் சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு வெள்ளநீரில் மூழ்கியதால், பல கிலோமீட்டர் தூரத்திற்குப் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் நெடுஞ்சாலை பிரவேச வழிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையிலான ரயில் சமிக்ஞை அமைப்பு வெள்ளத்தில் மூழ்கியதால் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிரதான பாதை, கடலோரப் பாதை மற்றும் களனிவெளிப் பாதையில் பயணித்த அனைத்து அலுவலக ரயில்களும் பல மணிநேரம் தாமதமாகிப் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீர்மட்டம் உயர்ந்தமையால் வைத்தியசாலையின் மின்தூக்கி அமைப்பு முழுமையாகச் செயலிழந்துள்ளது. இதன் காரணமாக தீவிர நோயாளிகளை வார்டுகளுக்கும் அறுவை சிகிச்சை கூடங்களுக்கும் கொண்டு செல்வதில் பெறும் பாதிப்பு ஏற்பட்டன.

தற்போது நிலவும் இடைக்காலப் பருவமழை காலநிலை காரணமாக வரும் நாட்களிலும் பிற்பகல் வேளையில் பலத்த மழை எதிர்பார்க்கப்படும் பின்னணியில், வடிகால் அமைப்புகளிலுள்ள அடைப்புகளை விரைவாக நீக்குதல் மற்றும் மழைநீர் வடிந்தோடும் வழிகளை முறைப்படுத்துதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

No comments: