மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு கடமைகளில் ஈடுபடும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கள உத்தியோகத்தர்கள் மாவட்ட பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இன்று(23) கொரோனா தடுப்பு முகக்கவசங்களும், அங்கிகள் மற்றும் தடுப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் விடுத்த வேண்டுகோளில் பியுமெடிகா சர்வதேச தொண்டார்வ நிறுவனம் இந்த அன்பளிப்புகளை வழங்கி உள்ளது. மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது இந்த உபகரணங்கள் இலவசமாக அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டன.
ஊடகவியலாளர்களுக்கும், மாவட்ட பிரதேச செயலக சிற்றூழியர்களுக்கும் அனர்த்த நிவாரண முகாமைத்துவ கள உத்தியோகத்தர்களுக்கும் இந்த இலவச அன்பளிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த விஷேட நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பியுமெடிகா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் டி.ஜி.பிருதிவிராஜ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட அரச தகவல் அதிகாரி வடிவேல்.ஜீவானந்தம் உட்பட பல அதிகாரிகளும் ஊடகவியலாளர்களும் சிற்றூழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில் கொரோனா வைரஸ் நிலவும் இந்த சூழலில் மக்கள் பயம் பீதியுடன் வாழும் சூழ்நிலையை தடுப்பதற்கு ஊடகவியலாளர்கள் தனது பொறுப்புகளை உணர்ந்து கடமையை செய்ய முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.










No comments: