News Just In

10/29/2020 06:59:00 PM

மட்டக்களப்பில் தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் LIFT நிறுவனத்தால் அரசாங்க அதிபரிடம் வழங்கி வைப்பு!!


மட்டக்களப்பில் அசாதாரண சூழ்நிலை காரணமாக தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்ற குடும்பங்களின் அன்றாட தேவைக்கான உலர் உணவுப் பொதிகளை முதலாவது கொரோனா அலையின் போது வழங்கியது போன்று இம்முறையும் LIFT நிறுவனத்தினால் மனிதாபிமான நோக்கோடு வழங்கிவைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையிட்டு தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் மாவட்ட செயலகத்தினால் பெற்றுக் கொடுக்க மாவட்ட செயலாளரும்,அரசாங்க அதிபருமாகிய திரு.கே.கருணாகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சிணி ஸ்ரீகாந்தின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் LIFT தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் சுமார் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான 40 உலர் உணவுப் பொதிகளைக் கையளிக்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இன்று (29) இடம்பெற்றது.

கொரோனா தொற்று காரணமாக கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி மற்றும் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நோக்கில் LIFT அமைப்பின் பொதுச் செயலாளர் திருமதி. ஜானு முரளிதரனினால் இவ்வுலர் உணவுப் பொதிகள் மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரனிடம் கையளிக்கப்பட்டது.

இந்த உலர் உணவுப் பொதிகளைக் கையளிக்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், நிருவாக உத்தியோகத்தர் கே.தயாபரன், மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன் LIFT அமைப்பின் பொருளாளர் தர்சினி சுபாஸ்கரன், வெளிக்கள இணைப்பாளர் எம். தயானிதி உட்பட பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.











No comments: